புத்த துறவியாக மாற ஐஸ்கிரீம் நிறுவனத்தை விற்கும் தொழிலதிபர்

தாய்லாந்தில் தொழிலதிபர் ஒருவர் புத்த துறவியக மாறவுள்ள நிலையில், தனது நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
Thailand Havells ice cream owner
Published on

தாய்லாந்தில் சிரிபோங் அக்கராஸ்ரியுக் என்பவர் புத்த துறவியாக மாறுவதற்காக, தான் நடத்தி வந்த ஹாவெல்ஸ் என்ற ஐஸ்கிரீம் நிறுவனத்தை சுமார் 47 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.

மேலும் 2.77 ஏக்கர் அளவிலான தனது நிறுவனத்தின் நிலத்தையும், அலுவலகம் மற்றும் தொழிற்சாலயையும் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

ஹாவெல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனம்

தாய்லாந்து நாட்டில் சிரிபோங் அக்கராஸ்ரியுக் என்பவர் சிறுவயதில் இருந்தே ஐஸ்கிரீம் மீது பிரியம் கொண்டு, ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் சொந்தமாக ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தை ஆரம்பித்து தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்று விரும்பினார்.

இதையடுத்து இவர் கடந்த 1999-இல் ஹாவெல்ஸ் என்ற ஐஸ்கிரீம் நிறுவனத்தை ஒரு வணிக வளாகத்தில் தொடங்கினார். அவர் தொடங்கிய மூன்று ஆண்டுகளில் அந்த நிறுவனம் 22 கிளைகளாக விரிவடைந்தது.

இதற்கிடையில் சிரிபோங் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதை அடுத்து, அவரது நிறுவனம் தாய்லந்து மக்களிடம் நன்கு அறிமுகமான பிராண்டாக மாறியது.

தாய்லாந்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் போட்டி அதிகரித்ததால், சிரிபோங் ஐஸ்கிரீம் நிறுவனத்தை நடத்தி வந்த வணிக வளாகம் உட்பட அதனை சுற்றியுள்ள இடங்களை ஒப்பந்தம் மூலம் போட்டியாளர்கள் கைப்பற்றினர்.

சந்தையில் போட்டி

இதன்மூலம் சிரிபோங்கால் அந்த பகுதியில் ஐஸ்கிரீம் நிறுவனத்தை புதிதாக தொடங்க முடியாமல் போனது. அதே நேரத்தில், அந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய ஐஸ்கிரீம் நிறுவனத்தை தொடங்கினர்.

அதன் விளைவாக 2014-ஆம் ஆண்டில், சிரிபோங் நடத்தி வந்த ஒரு ஐஸ்கிரீம் விற்பனையகம் முற்றிலுமாக மூடப்பட்டது. பல்வேறு வணிக வளாகங்களுடன் சிரிபோங் பேச்சுவார்த்தை நடத்தியும், அவரால் புதிய கிளைகளை திறக்க முடியாமல் போனது.

இதுகுறித்து சிரிபோங் கூறுகையில், வணிக வளாகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல கடைகள் காலியாக இருந்தபோதிலும், தனது நிறுவனத்தை தொடங்க, வணிக வளாகங்கள் மறுத்து வந்ததாக கூறினார்.

புத்தரிடம் இருந்து பெறப்பட்ட வெற்றி

இதையடுத்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தான் உலக வாழ்க்கையை துறந்துவிட்டு, பெளத்த மதத்தில் தன்னை இணைத்து கொள்ள இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு தான் எழுதிய ‘புத்தரிடம் இருந்து பெறப்பட்ட வெற்றி’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பெளத்த போதனைகள் குறித்த பல்வேறு உரைகளையும் ஆற்றி வந்தார்.

இந்த இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு நிலம் வாங்கி, துறவியாக தீட்சை பெறுவதற்கு முன்பு தியானம் செய்வதற்காக ஒரு வன தியான மையத்தை நிறுவ விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஹாவெல்ஸ் நிறுவனம் தனது வாழ்விலும் குடும்பத்திலும் ஒரு அங்கமாக உள்ளதாவும், தான் இந்த நிறுவனத்தை விட்டு விலகினாலும், தனது ஹாவெல்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னேறுவதை காண விரும்புவதாகவும் சிரிபோங் கூறியுள்ளார்.

ஐஸ்கிரீம் நிறுவனம் விற்பனை

இந்த நிலையில் சிரிபோங் தனது ஹாவெல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனத்தை சுமார் 47 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்ய இருப்பதாக பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் 2.77 ஏக்கர் அளவிலான நிலம், இயந்திரங்கள், அலுவலம் மற்றும் தொழிற்சாலையையும் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒப்பந்த உரிமையாளர்களை தன்னிடம் அறிமுகப்படுத்தும் நபர்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய் தருவதாகவும் சிரிபோங் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com