

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை காண லண்டனின் மிக உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' (The Shard) முன்பாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி மெட்ரோபாலிட்டன் காவல்துறை தலையிட்டதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்த ரத்து நடவடிக்கை, பல மணிநேரம் வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் பலரையும் ஏமாற்றமடையச் செய்தது. "பொது பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாகவும், பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் அனுமதி இல்லாததாலும் நாங்கள் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்," என்று முதல்வரின் குழுவை சேர்ந்த ஒருவர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்.
"இது நியாயமானதுதான் என்று நான் நினைக்கிறேன், ஆனால் இவ்வளவு மக்களும் காத்திருந்தார்களே. இது தமிழகத்தில் நாம் காணும் கூட்டத்தை போன்றது அல்ல," என்று நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தங்கும் விடுதிக்கு வெளியே பல மணிநேரமாக காத்திருந்த ஒரு இளம் ரசிகர் கூறினார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், மாநில குழு ஒன்றை வழிநடத்தி முதலமமைச்சர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார்.
முன்னதாக, இந்த வருகையின் போது சுமார் ரூ. 12,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை உள்ளடக்கிய பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அந்த குழு கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.
ஆசியாவின் முதன்மையான மேம்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாக தமிழகத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த முதலீட்டு முயற்சியின் மூலம், மாநிலம் முழுவதும் 9,400-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு புதன்கிழமை இந்தியா திரும்பத் திட்டமிட்டுள்ளார்.