

தலிபான்கள் ஆப்கானிய பெண்களின் பெயர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக அவற்றை பறித்து, அவற்றிக்கு பதிலக பீபி, ஆடு ,மாடு போன்ற சொற்களை பயன்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியான பால்க் (Balkh) மாகாணத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்துவதற்கு தலிபான் நிர்வாகம் தடை விதித்துள்ளதாகவும், அதற்குப் பதிலாக 'பீபி' (Bibi) என்ற பொதுப் பெயரையும், சில இடங்களில் 'ஆடு' மற்றும் 'பசு' போன்ற இழிவான சொற்களையும் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானின் 'ஸான் டைம்ஸ்' (Zan Times), 'தி கார்டியன்' (The Guardian) மற்றும் 'எல் பாயிஸ்' (El País) ஆகிய ஊடகங்களின் புலனாய்வு அறிக்கைகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் தகவல்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்க் மாகாணத்தில் உள்ள தலிபான்களின் ஒழுக்கநெறி அமைச்சக அதிகாரிகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள பதிவேடுகள் மற்றும் மருந்துச் சீட்டுகளில் பெண்களின் இயற்பெயர்களை எழுதவோ அல்லது பொதுவில் உச்சரிக்கவோ கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
அதற்கும் பதிலாக பெணகளின் பெயர்களுக்கு பதிலாக 'பீபி' என்று குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. தாரி (Dari) மற்றும் பாஷ்டோ (Pashto) மொழிகளில் 'பீபி' என்பது 'பாட்டி' அல்லது 'வயதான பெண்' என்பதைக் குறிக்கும் பாரம்பரிய மரியாதைச் சொல்லாகும்.
பொதுவெளியில் பெண்களின் பெயரைக் கூறுவது குடும்ப கௌரவத்திற்கு இழுக்கு என்ற பழமைவாதக் கருத்தின் அடிப்படையில் தலிபான்கள் இதை நியாயப்படுத்துகின்றனர்.
'பீபி' என்ற பொதுச் சொல்லுக்கு அப்பால், சில இடங்களில் பெண்களை 'ஆடு' மற்றும் 'பசு' போன்ற விலங்குகளின் பெயர்களால் இழிவுபடுத்தி அழைப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், விலங்குகளின் பெயர்களைப் பயன்படுத்தச் சொல்லி தலிபான்கள் எழுத்துப்பூர்வ உத்தரவு எதையும் பிறப்பித்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த உத்தரவால் மருத்துவமனைகளில் அனைத்துப் பெண்களின் பதிவுகளும் 'பீபி' என்ற ஒரே பெயரில் பதியப்படுவதால், நோயாளிகளை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டு தவறான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும் அபாயம் உள்ளதாக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்கனவே ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பெண்களின் உயிருக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமை ஆர்வலர்களின் கண்டனம். ஜெர்மனியில் வசிக்கும் ஆப்கானியப் பெண்கள் உரிமை ஆர்வலர் லாலா உஸ்மானி இது பெண்களின் தனித்துவத்தையும் மனிதத்தன்மையையும் அழிக்கும் திட்டமிட்ட செயல் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2017-ல் இவர் முன்னெடுத்த 'என் பெயர் எங்கே?' (#WhereIsMyName) இயக்கத்தின் விளைவாகத் தேசிய அடையாள அட்டைகளில் தாயின் பெயரைச் சேர்க்கும் உரிமை கிடைத்த நிலையில், தலிபான்களின் இந்த நடவடிக்கை பெண்களை மீண்டும் அடையாளமற்றவர்களாக மாற்றுவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்த உத்தரவு பால் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், கடந்த காலங்களில் உள்ளூர் அளவில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இது ஆப்கானிஸ்தான் முழுவதும் பரவக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.