

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி 23 யானைகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை விருந்தில் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள், ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.
போட்ஸ்வானா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 60-வது ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடியது.இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுதந்திர தின விருந்துக்காக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
அரசின் அனுமதியின்படி 23 யானைகள் 8 மாவட்டங்களில் வேட்டையாடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 23 யானைகளில் எத்தனை யானைகள் உண்மையில் கொல்லப்பட்டுள்ளன என்பது குறித்து இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
வேட்டையாடப்படும் யானைகளின் இறைச்சி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக உள்ளூர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பகுதிகளில் யானைகளின் உடல்களைச் சுற்றி மக்கள் திரண்டு இறைச்சியை எடுத்துச் செல்லும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யானைகளை சுதந்திர தின விருந்துக்காக கொல்வது வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் என்று போட்ஸ்வானாவைச் சேர்ந்த யானைகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஓயிட்சே நாவா கவ்லை தெரிவித்துள்ளார். கொண்டாட்ட விருந்துகளுக்கு யானைகளைப் பயன்படுத்துவது, வனவிலங்குப் பாதுகாப்பு குறித்து ஒரு தவறான அச்சுறுத்தலை ஏற்படுத்தும், என்றும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், போட்ஸ்வானாவில் கால்நடைகளிடையே காணப்படும் தொற்று காரணமாக மக்களுக்கு நோய்பரவி வரும் நிலையில், வனவிலங்கு இறைச்சி விநியோகம் குறித்து சிலர் சுகாதாரக் கவலைகளையும் எழுப்பியுள்ளனர்.
சில உள்ளூர் அதிகாரிகள், இறைச்சியை நேரடியாக விநியோகிப்பதற்கு பதிலாக முறையாக பதப்படுத்தி சிறிய தொகுப்புகளாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இறைச்சி விநியோகிக்கும் முறையில் கூடுதல் கவனம் தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான யானைகள் உள்ள நாடுகளில் போட்ஸ்வானா முதன்மையானதாக உள்ளது.. அந்நாட்டில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானைகள் அதிகமாக இருப்பதால் விவசாய நிலங்களில் பயிர்கள் சேதமடைவதாகவும், சில நேரங்களில் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படுவதாகவும் போட்ஸ்வானா அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட வேட்டை மூலம் மனிதர்–யானை மோதலை குறைக்கவும், உள்ளூர் சமூகங்களுக்கான வருவாயை அதிக்கப்டுத்த இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது