

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோ நகரின் கிளேர்மாண்ட் பகுதியில் மிகப்பெரிய மசூதி ஒன்று உள்ளது. மசூதி வளாகத்தில் இஸ்லாமியப் பள்ளி ஒன்றும் இயங்கி வந்ததால், அங்கு ஏராளமான குழந்தைகளும் ஊழியர்களும் இருந்தனர்.
இந்தநிலையில் மசூதி வளாகத்திற்குள் திடீரென கையில் துப்பாக்கியுடன் 2 மர்மநபர்கள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி மற்றும் 2 பள்ளி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மர்மநபர்கள் இருவரும் சற்று தொலைவில் சென்று ஒரு காரில் தங்களைத் தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரியின் துரிதமான மற்றும் வீரமிக்க செயலால் கொலையாளிகள் மசூதிக்குள்ளோ அல்லது பள்ளிக்குள்ளோ நுழைய முடியாமல் தடுக்கப்பட்டதால், அங்கு நடக்க இருந்த மிகப்பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய கொலையாளிகள் சான்டியாகோவைச் சேர்ந்த 17 மற்றும் 18 சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவனது தாய், சம்பவத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு தனது மகனையும், வீட்டில் இருந்த சில துப்பாக்கிகள் மற்றும் காரையும் காணவில்லை என போலீசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் மத வெறுப்பு தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. மற்றும் உள்ளூர் போலீசார் இதனை ‘மத வெறுப்புக் குற்றமாக’ கருதித் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள மசூதிகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.