சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இலங்கை குடிமகன் - மரண தண்டனையை ரத்து செய்து சவுதி அரேபியா தீர்ப்பு

இலங்கை குடிமகனான 24 வயதான சிவராசா, சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Anojan Sivarasa
Published on: 
Summary

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் இலங்கையை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை குடிமகனான 24 வயதான சிவராசா, சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இலங்கையில் கடந்த மாத இறுதியில் நடந்த ஒரு இந்து புனித யாத்திரையின் போது, இந்து யாத்ரீகர்களை பின் தொடர்ந்து வந்த நாயை, முஸ்லிம் நபர் ஒருவர் காலால் எட்டி உதைப்பது போன்ற காணொளி இணையத்தில் பரவியது.

சர்ச்சைக்குரிய பதிவு

இந்த காணொளியில் பயனர் ஒருவர் இந்து தெய்வம் பற்றி இழிவான கருத்துகளை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்லாம் குறித்து சில கருத்துகளை சிவராசா பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே தான் பதிவிட்ட கருத்தை நீக்கிவிட்டு, அதற்கு மன்னிப்பு கோரும் காணொளி ஒன்றை சிவராசா வெளியிட்டார்.

மரண தண்டனை

சிவராசா அந்த பதிவை நீக்கியிருந்தாலும், அதன் ஸ்கிரீன்ஷாட்டுகள் மின்னஞ்சல் வழியாக சவுதி அரேபியாவில் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து ஜூலை 15 அன்று, சிவராசாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் அந்த தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தி அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருணை கடிதம்

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் தியுதீன், வி ராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டைமான், செல்வம் அடைக்கலநாதன், சானக்கியன் ராசமாணிக்கம் ஆகியோர் செப்டெம்பர் 24 அன்று சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருக்கு கருணை கோரி கடிதம் எழுதினர்.

பின்னர் சவுதியின் தம்மாம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை, சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதர் உமர் லெப்பே அமீர் அஜ்வாட் அக்டோபர் 8 அன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.

மரண தண்டனை ரத்து

இந்த நிலையில் சவதி உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 11 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை தொடர்ந்து, சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிவராசாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சவுதி அரேபியாவின் இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுவிட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com