ஸ்பெயினில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் – பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதிரடி அறிவிப்பு

ஸ்பெயினில் அடுத்த பொதுத்தேர்தல் 2027-ம் ஆண்டு நடைபெற இருந்த நிலையில், தற்போது சுமார் 9 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Spanish Prime Minister Pedro Sanchez
Published on: 

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், திட்டமிட்ட காலத்திற்கு முன்பாக பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளார். இதன்படி, வரும் நவம்பர் 29-ந் தேதி ஸ்பெயினில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் வார இறுதியில் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு, மாட்ரிட்டின் மோன்க்ளோவா அரண்மனையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சான்செஸ் இந்த முடிவை அறிவித்தார்.

தேர்தல் அறிவிப்பு குறித்து பிரதமர் பேசியதாவது

தேர்தல் அறிவிப்பின்போது பேசிய சான்செஸ், ஸ்பெயினின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.

மேலும், தனது அரசின் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஸ்பெயினில் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதனால் வரும் தேர்தல், சான்செஸ் அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது என்று கூறினார்

தேர்தல் நடத்தப்படுவதற்கான காரணம்

ஸ்பெயினில் அதிகரித்து வரும் வீட்டு வாடகை மற்றும் வீட்டு வசதி நெருக்கடியை சமாளிப்பதற்காக பிரதமர் சான்செஸ் அரசு 2 அவசர நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது.

வாடகைதாரர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், பாதிக்கப்படக்கூடிய மக்களின் வெளியேற்றத்தை தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் அந்த நடவடிக்கைகளில் இடம்பெற்றிருந்தன. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் அந்த இரு நடவடிக்கைகளும் தோல்வியடைந்தன.

பிரதமர் சான்செஸின் கூட்டணி அரசுக்கு போதிய நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்த தோல்வி அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

நாடு முழுவதும் வெடித்த போராட்டம்

வீட்டு வாடகை உயர்வுக்கு எதிராகவும், மலிவு விலையில் வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஸ்பெயினின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் மாட்ரிட்டில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 50 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் தனது அரசுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த சான்செஸ், மக்களிடம் நேரடியாக புதிய ஆதரவை பெற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

போராட்டத்திற்கான காரணம்

இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணம் கடந்த செப்டம்பர் மாதம், மாட்ரிட் நகரில் வசித்து வந்த 87 வயதான மாரிகார்மென் அபாஸ்கல் என்ற மூதாட்டி , வாடகை உயர்வைச் செலுத்த முடியாததால், அவரது வீட்டில் இருந்து காவல்துறையினரால் ஸ்ட்ரெச்சரில் வைத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் செய்திகள் ஸ்பெயின் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, நாடு தழுவிய போராட்டமாக வெடித்தது

X

Maalai Malar
www.maalaimalar.com