வீடுகள் பற்றாக்குறை.. விண்ணை முட்டிய வாடகை - மூதாட்டிக்கு நேர்ந்த அநீதி - ஸ்பெயினில் வெடித்த மக்கள் போராட்டம்

அடுத்தகட்டமாக நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் மக்கள் போராட்டம்
ஸ்பெயினில் மக்கள் போராட்டம்
Published on: 
Summary

ஸ்பெயினில் வீட்டுவசதி பற்றாக்குறை, விண்ணை முட்டும் வாடகை மற்றும் கட்டாய வெளியேற்றங்கள் ஆகியவற்றால் ஆத்திரமடைந்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மற்றும் நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பற்றாக்குறை

ஸ்பெயினில் தற்போது சுமார் 700,000 வீடுகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வாடகைகள் சராசரியாக 8.5% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாட்ரிட் மற்றும் பார்சிலோனா போன்ற நகரங்களில் இந்த உயர்வு இன்னும் அதிகமாக இருக்கும். மேலும், வீட்டு விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன.

தோல்வி

இந்தச் சூழலில், பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான மைனாரிட்டி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இரண்டு முக்கிய முன்மொழிவுகளை அறிமுகப்படுத்தியது.

2030ஆம் ஆண்டு வரை நலிவடைந்த பிரிவினரை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுவதை நிறுத்துதல் மற்றும் சில வாடகை ஒப்பந்தங்களை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

இருப்பினும், பாப்புலர் பார்ட்டி, வோக்ஸ் மற்றும் ஜுண்டாஸ் ஆகிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்த முன்மொழிவுகள் தோற்கடிக்கப்பட்டன.

இது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றோரு சம்பவமும் மக்கள் கோபத்தை மேலும் அதிகரித்து போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

கோபத்தின் சின்னம்

தலைநகர் மாட்ரிடில் பல ஆண்டுகளாக ஒரே குடியிருப்பில் வசித்து வந்த 87 வயதான மாரிகார்மென் அபாஸ்கல் என்ற மூதாட்டி, அண்மையில் தனது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

அந்தக் கட்டிடத்தை வாங்கிய முதலீட்டு நிறுவனம் அவரால் செலுத்த முடியாத அளவுக்கு வாடகையை உயர்த்தியது. இந்தச் சம்பவம் நாடு தழுவிய மக்கள் கோபத்தின் சின்னமாக மாறியுள்ளது.

போராட்டம்

நாடாளுமன்றத்தில் முன்மொழிவு தோல்வி மற்றும் முதியவருக்கு நேர்ந்த அநீதி ஆகியவற்றால் கிளர்ந்தெழுந்த மக்கள் நேற்று நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராடினர்.

மாட்ரிட்டில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 70,000 பேர் பங்கேற்றனர்.

குறைந்த வாடகை, வெளியேற்றங்களுக்கு எதிரான வலுவான சட்டப் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் வீடுகளை வாங்குவதற்குக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

அடுத்தகட்டமாக நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலால் ஸ்பெயினில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com