

ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு எத்தியோப்பியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக பல டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்த தாக்குதல்களில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட குறைந்தது 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள அம்ஹாராவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் மீது வியாழக்கிழமையன்று அடுத்தடுத்து 5 டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இங்கு மட்டுமே 16 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
மறுபுறம் டிக்ரே பிராந்தியத்தின் ரமா நகரில் தானியம் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மறுநாள் காலையில் சிதறிய தானியங்களை சேகரிக்க பொதுமக்கள் கூடியபோது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் 12க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
எத்தியோப்பிய அரசுப் படைகள் கடந்த ஒரு மாதமாக டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அம்ஹாராவின் பானோ கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
கிளர்ச்சியாளர்களை குறிவைக்கும் அதேவேளையில் அரசு படைகள் டிரோன் தாக்குதல்களில் பொதுமக்களையும் கொன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்கள் எவரும் இலக்கு வைக்கப்படவில்லை என்றும், தீவிரவாதக் குழுக்களை மட்டுமே டிரோன்கள் மூலம் துல்லியமாக தாக்கி வருவதாகவும் எத்தியோப்பிய ராணுவத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் டிரோன்களைப் பயன்படுத்துவது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த கண்மூடித்தமான தாக்குதல்களை உடனே நிறுத்துமாறு சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.