விரிவடையும் உக்ரைன் போர்.. பின்லாந்து அருகே ரஷிய கப்பல் மீது டிரோன் தாக்குதலால் பரபரப்பு

இந்தத் தாக்குதல் சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
ரஷிய கப்பல் மீது டிரோன் தாக்குதல்
ரஷிய கப்பல் மீது டிரோன் தாக்குதல்
Published on: 
Summary

ரஷியக் கப்பல் மீது பின்லாந்து அருகே சர்வதேச கடல் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடரும் போருக்கு மத்தியில், பால்டிக் கடலில் ரஷியக் கப்பல் ஒன்று மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று பால்டிக் கடலில் நடந்த டிரோன் தாக்குதலில், ஒரு ரஷிய சரக்குக் கப்பல் தீப்பிடித்து பின்லாந்து கடல் பகுதிக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்லாந்து காரணமா?

இதைத் தொடர்ந்து பின்லாந்து தற்காலிக வான் மற்றும் கடல் தடையை விதித்தது.

இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பின்லாந்துதான் இருப்பதாக உக்ரைன் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சர்வதேச கடல் பகுதி

லெனின்கிராட் பிராந்தியத்தின் ஆளுநரான அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோவின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல் சர்வதேச கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

இந்தத் தாக்குதல் நடந்த இடம், ரஷியாவின் கோக்லாண்ட் தீவுக்கு மேற்கிலும், ரஷிய கடல் எல்லையிலிருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவிலும் இருந்தது. அந்தக் கப்பல் ரஷியாவின் கலினின்கிராட் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது என அவர் கூறியுள்ளார்.

ரஷியா - பின்லாந்து

ஏற்கனவே உக்ரைனுடனான போருக்கு மத்தியில் தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அண்டை நாடான பின்லாந்து, ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என ரஷியா நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியானது. இதற்கு பின்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அத்தகு நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என ரஷியா பின்னர் தெளிவுபடுத்தியது.

உக்ரைன் நேட்டோவில் இணையும் முயற்சியை எதிர்த்தே ரஷியா போரை தொடங்கியது. அண்டை நாடுகளான இவை நேட்டோவில் இணைவதால் தங்கள் நாட்டின் மீது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சக்திகளால் எளிதில் ஊடுருவி தாக்குதல் நடத்த முடியும் என்பதே ரஷியாவின் அச்சமாக உள்ளது.

X