

பாகிஸ்தான் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 28 மாணவர்கள், ஒரு ஆசிரியை என 29 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண தலைநகர் பெஷாவரில் திர் காலனி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
இன்று பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் இருந்தனர். அப்போது ஒரு வகுப்பறையின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் மாணவர்கள் சிக்கிக்கொண்டனர்.
உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி மாணவர்களை மீட்டனர்.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் 28 மாணவர்கள், ஒரு ஆசிரியை என 29 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களில் 6 மாணவிகள் அடங்குவர். பலியான மாணவர்கள் அனைவரும் 13 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியில் இன்னும் மாணவர்கள் அல்லது பள்ளி ஊழியர்கள் சிக்கியிருக்கிறார்களா என்று தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கலை தெரிவித்து உள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தை அறிந்ததும் பெற்றோர்கள் அலறியடித்தபடி பள்ளிக்கு வந்தனர். அங்கு பலியான மாணவர்கள் உடலைப் பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பள்ளி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.