ஏமனில் சவுதி கூட்டணி படைகள் வான்வழித் தாக்குதல்: 17 பேர் உயிரிழந்ததாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தகவல்

தலைநகர் சனாவில் உள்ள காலணித் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 9 பேர் காயமடைந்துள்ளனர்.
Houthi rebels
Published on: 
Summary

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் குறிவைத்துச் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகள் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஹவுதி கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் உள்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளரான மேஜர் ஜெனரல் துர்கி அல்-மல்கி வெளியிட்ட தகவலின்படி, தலைநகர் சனா அத்துடன் அம்ரான், சாதா மற்றும் ஹொடைடா ஆகிய மாகாணங்களில் உள்ள 60 முக்கிய ராணுவ இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஹவுதி அமைப்பினரின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் திறன்களை முடக்கும் நோக்கத்துடனேயே இந்த அதிரடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தயாரித்து சேமித்து வைக்கும் பட்டறைகள் உள்ளிட்டவை முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் மீதான தாக்குதல்

ஹவுதி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல்-அஸ்பாஹி கூறுகையில், ஹொடைடா நகரில் உள்ள ஒரு பஞ்சுத் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார். மேலும், சாதா மாகாணத்தின் கிதாப் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர். தலைநகர் சனாவில் உள்ள காலணித் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 9 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாஸ்டிஸ்டிக் ஏவுகணை

தலைநகர் ரியாக்கை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று அதிகாலை ஏவிய குரூயிஸ் ஏவுகணை ஒன்றைச் சவுதி அரேபியா வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக மேஜர் ஜெனரல் துர்கி அல்-மல்கி உறுதிப்படுத்தினார். பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சவுதி ஆதரவுப் படைகள் சமீபத்தில் பின்வாங்கியதைத் தொடர்ந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்த முக்கிய நீர்வழிப் பகுதியின் மீது தங்கள் பிடியை மேலும் பலப்படுத்தியுள்ள நிலையில் இந்தத் தீவிர வான்வழித் தாக்குதல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X