

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலால், உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், ஓமன் நாட்டின் காசாப் நகருக்கு அருகே கடல் கண்ணிவெடியில் சிக்கி எண்ணெய்க் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. தங்களது அனுமதியின்றி அந்த வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மறுபுறம், ஈரானியக் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படையும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், போரின்போது இப்பகுதியில் புதைக்கப்பட்ட கடல் கண்ணிவெடிகளால் அவ்வழியே செல்லும் கப்பல்களுக்குத் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஓமனின் காசாப் நகருக்கு அருகே உள்ள கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பல், எதிர்பாராத விதமாகக் கடலில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது மோதியது. இந்தப் பயங்கர வெடிவிபத்தில் கப்பலின் இயந்திர அறை தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
கப்பலில் இருந்து கரும்புகை வெளியேறியதைத் தொடர்ந்து, உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடற்படை மற்றும் மீட்புக்குழுவினர், தீப்பிடித்து எரிந்த கப்பலில் சிக்கியிருந்த ஊழியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதை ஈரான் கடற்படை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து ஈரான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், கண்ணிவெடியில் சிக்கிய அந்த எண்ணெய்க் கப்பலுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்கே உள்ள தடைசெய்யப்பட்ட கடல் பகுதியில் அந்தக் கப்பல் அத்துமீறி நுழைந்துள்ளது.
மேலும், தங்களது நடமாட்டத்தை மறைக்கும் விதமாக, கப்பலின் வழிசெலுத்தல் மற்றும் தானியங்கு அடையாள அமைப்புகளை அணைத்துவிட்டுப் பயணித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என ஈரான் கடற்படை குற்றம் சாட்டியுள்ளது.
தொடரும் இந்தத் தாக்குதல்கள் மற்றும் கண்ணிவெடி அச்சுறுத்தல்களால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் சரக்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.