

சவுதி அரேபியாவிற்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், சவுதிக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குரல் கொடுக்காமல் இருப்பது போர் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக மத்திய கிழக்கு திட்டத்தின் இயக்குநர் மோனா யாகூபியன் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவிற்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீப நாட்களாக தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஹவுதிகள் தெற்கு சவுதியில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்தும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஹவுதிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சவுதியை நோக்கி ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவி தாக்குதல் நடத்தினர்.
உலகளாவிய கப்பல் போக்குவரத்து முக்கிய வழித்தடமான பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை சுற்றியுள்ள பகுதிகளையும், ஹவுதி அமைப்பு கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலைகள் சவுதி அரேபியாவை வணிகம், சுற்றுலா மற்றும் வர்த்த ரீதியிலாக பெரும் பின்னடைவுக்கு தள்ளியுள்ளது.
இதற்கிடையில் உயர்ந்த எரிபொருள் விலைகள் மற்றும் ஈரான் உடனான போரில் ஏற்பட்ட மிகுந்த போர் செலவுகள் ஆகிய காரணிகள் சவுதி அரேபியாவிற்கு உதவுவதற்கு அமெரிக்காவுக்கு தடையாக பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கணிசமான ராணுவத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள வெடிமருந்து பொருட்கள் மற்றும் ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.
இதற்கிடையில் கடந்த வாரம் சவுதி அரேபியாவுக்கு 24.3 பில்லியன் டாலர் மதிப்பிலான எஃப்-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இருந்தபோதிலும் இந்த போர் விமானங்கள் சவுதிக்கு கிடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மியாமி நகரில் மார்ச் மாதம் சவுதி அரேபியா நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், சவுதி இளவரசர் இந்தளவிற்கு என் காலை நக்குவார் என நான் எதிர்பார்க்கவில்லை என கூறியிருந்தார்.
இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நாட்டிற்கு எதிராக ‘பிராஜக்ட் ஃப்ரீடம்’ என்ற திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்தார்.
அமெரிக்காவின் பிராஜக்ட் ஃப்ரீடம் திட்டம், பிராந்திய அளவிலான ஒற்றுமைகளை சீர்குலைத்து, வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை தூண்டிவிடும் என்று அஞ்சி தங்கள் நாட்டின் வான்வெளி தளங்களையும், வான்வெளியையும் அமெரிக்க போர் விமானங்கள் பயன்படுத்த சவுதி அரேபியா மறுத்துவிட்டது.
இதற்கிடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க கப்பல்களை தாக்க மாட்டோம் என அறிவித்து, அமெரிக்காவுடன் சுமூகமான முறையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒப்பந்தம் கையெழுத்திட்டனர்.
இதன் காரணமாக சவுதி அரேபியா தனித்து விடப்பட்டு, ஈரான், அமெரிக்கா மற்றும் எந்தவொரு நாட்டின் உதவியையும் பெற முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளது.
இந்த நிலையில் வியூக மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் மத்திய கிழக்கு திட்டத்தின் இயக்குநர் மோனா யாகூபியன் கூறுகையில், சவுதி அரேபியாவுக்கு உதவாமல் அமெரிக்கா மறுப்பது, இருதரப்பு உறவில் மேலும் பதற்றத்தை மட்டுமே ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் பங்களிப்பை எந்த அளவிற்கு நம்பலாம் என்ற நிதர்சனமான உண்மையை சவுதி அரேபியா உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.