

சவுதி அரேபியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு உதவுபவர்கள், விதிமீறலாளர்களை நாட்டிற்குள் அழைத்துச் செல்பவர்கள், தங்குமிடம் அளிப்பவர்கள் அல்லது வேறு எந்த வகையிலாவது உதவி செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியாவில் குடியிருப்பு, தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரே வாரத்தில் 11,952 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 11,418 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நவம்பர் 5 முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை சவுதி அரேபியா முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கூட்டு முயற்சியுடன் இந்தத் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கையில், குடியிருப்பு விதிகளை மீறிய 6,163 பேரும், எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய 3,225 பேரும், தொழிலாளர் விதிகளை மீறிய 2,564 பேரும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சோதனைக் காலத்தில், சவுதி அரேபியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 1,653 பேர் பிடிபட்டனர். அதேபோல், நாட்டை விட்டுச் சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 29 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், விதிகளை மீறிய நபர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்து கொடுத்தது, தங்குமிடம் அளித்தது மற்றும் வேலைக்கு அமர்த்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 15 பேரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
விதிமீறல்களில் ஈடுபட்டவர்களில் 11,418 பேர் ஏற்கனவே அவரவர் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் 22,451 பேர், தாயகம் திரும்புவதற்குத் தேவையான பயண ஆவணங்களைப் பெறுவதற்காக அவரவர் நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மேலும் 9,800 பேர் பயண ஏற்பாடுகளை முழுமைப்படுத்தும் நடைமுறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது 38,383 ஆண்கள் மற்றும் 2,379 பெண்கள் என மொத்தம் 40,762 வெளிநாட்டவர்கள் சட்ட நடைமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
சவுதி அரேபியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு உதவுபவர்கள், விதிமீறலாளர்களை நாட்டிற்குள் அழைத்துச் செல்பவர்கள், தங்குமிடம் அளிப்பவர்கள் அல்லது வேறு எந்த வகையிலாவது உதவி செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10 லட்சம் சவுதி ரியால் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், விதிமீறலாளர்களை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் தங்க வைக்கப் பயன்படுத்தப்படும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.