

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள இர்குட்ஸ்க் பகுதியில், பிளேக் நோய் பாதிப்பால் 28 வயது பெண் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 மருத்துவமனைகள் மூடப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் அவசர தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள ஷெலெகோவ் 'பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில்' தார்யா ஷிபிலோவா என்ற 28 வயது பெண் பணியாற்றி வந்தார்.
ஆய்வகத்தில் சோதனைக்காக மாதிரிகளைச் சேகரித்தபோது, உயிருள்ள பாக்டீரியாக்கள் இருந்த சோதனைக்குழாய் ஒன்று எதிர்பாராதவிதமாக அவரது கையில் உடைந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அவர் மிகவும் ஆபத்தான 'நியூமோனிக் பிளேக்' தொற்றால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 29 அன்று கடுமையான நிமோனியா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தார்யா, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அக்டோபர் 1 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் உடனடியாகக் கண்டறியப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இர்குட்ஸ்க் நகரில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த மரணம் பிளேக் நோயால்தான் ஏற்பட்டது என்பதை ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இர்குட்ஸ்க் பிராந்திய ஆளுநர் இகோர் கோப்சேவ் கூறுகையில், "இது கண்டறியப்படாத ஒரு வகையான நிமோனியா காய்ச்சல்தான். அவரது உடலில் பிளேக் பாக்டீரியாக்கள் கண்டறியப்படவில்லை. அவருடன் தொடர்பில் இருந்த யாருக்கும் அறிகுறிகள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அண்டை மாநில ஆளுநர் அலெக்ஸி சிடெனோவ் தனது சமூக வலைதளப் பதிவில், அந்தப் பெண் "பிளேக் நோயால் இறந்திருக்கலாம்" என்று குறிப்பிட்டது பொதுமக்களிடையே சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் படி, எலிகள் மற்றும் உண்ணிகள் மூலம் பரவும் Yersinia pestis என்ற பாக்டீரியாவால் பிளேக் நோய் ஏற்படுகிறது. இதில் மிக ஆபத்தான வடிவம் தான் இந்த 'நியூமோனிக் பிளேக்'.
இது மனிதர்களின் நுரையீரலைத் தாக்கி, இருமல் மற்றும் சளி மூலம் காற்றில் மிக வேகமாக மற்றவர்களுக்கும் பரவக்கூடியது. அறிகுறிகள் தோன்றிய 24 மணி நேரத்திற்குள் உரிய ஆன்டிபயாடிக் சிகிச்சை அளிக்காவிட்டால், இந்த நோய் கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்தும்.
தற்போது ரஷ்யாவின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான 'Rospotrebnadzor' இந்த பகுதியில் தீவிர நோய் தடுப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.