அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் டார்சீவ் காலமானார்

அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் வட அட்லாண்டிக் துறைக்கு தலைமை வகித்தார்.
Alexander Darchiev
Published on: 

அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் டார்சீவ், தனது 66-வது வயதில் காலமானார் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. அவரது மரணத்திற்கான காரணத்தை அமைச்சகம் வெளியிடவில்லை.

ஓர் அறிக்கையில், டார்சீவ் "திடீரெனக் காலமானார்" என்றும், அவரை ஒரு "சிறந்த தொழில்முறை நிபுணர்" என்றும் அமைச்சகம் விவரித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் ராஜதந்திரத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கும் அது புகழஞ்சலி செலுத்தியது.

"ரஷ்ய வெளியுறவு கொள்கையின் மிகவும் சவாலான துறைகளில் ஒன்றில் அலெக்சாண்டர் டார்சீவ் பணியாற்றினார். அலெக்சாண்டர் டார்சீவின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த மற்றும் மனமார்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்," என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இதர பொறுப்புகள்:

ஒரு மூத்த இராஜதந்திரியான டார்சீவ், மார்ச் 2025 முதல் வாஷிங்டனுக்கான ரஷ்யாவின் தூதராக பணியாற்றி வந்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் மாஸ்கோவுடனான உறவுகளை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்த நேரத்திலும், அவரது நிர்வாகம் உக்ரைனுக்கான உதவியை குறைத்துக்கொண்டிருந்த நேரத்திலும் இந்த நியமனம் நிகழ்ந்தது.

டார்சீவ் மேற்கத்திய நாடுகளைக் கடுமையாக விமர்சிப்பதற்காக அறியப்பட்டார். வாஷிங்டனில் தூதர் பதவியை ஏற்பதற்கு முன்பு, அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் வட அட்லாண்டிக் துறைக்கு தலைமை வகித்தார்.

அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின்படி, அவர் 2014 முதல் 2021 வரை கனடாவிற்கான ரஷ்யாவின் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

X