உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன ஆலை மீது ரஷியா தாக்குதல் - ஒருவர் பலி

இந்தத் தாக்குதலில் ஆலையின் பிரதான கட்டமைப்பு கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டது.
 இந்திய ஆலை மீது ரஷியா தாக்குதல்
இந்திய ஆலை மீது ரஷியா தாக்குதல்
Published on: 
Summary

ரஷியா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனில் உள்ள ஒரு இந்திய மருந்து நிறுவனம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ரஷியாவால் ஏவப்பட்ட டிரோன்கள், உக்ரைனில் சுமி நகரில் உள்ள குசும் குழுமத்திற்கு சொந்தமான மருந்து ஆலையைத் தாக்கின.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர். இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழுமையாக அழிப்பு

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதலில் ஆலையின் பிரதான கட்டமைப்பு கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டது.

டிரோன்கள் தாக்கிய பகுதியிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின.

இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்த போதிலும், இந்த ஆலை தொடர்ந்து உற்பத்தியைத் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமீபத்திய தாக்குதல் அதன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திவிட்டது.

இந்திய நிறுவனம்

குசும் குழுமத்தை இந்தியரான ராஜீவ் குப்தா நடத்தி வருகிறார். இந்நிறுவனம் 1994ல் உக்ரைனுக்கு இந்திய மருந்துகளை ஏற்றுமதி செய்யும் விநியோகஸ்தராகத் தொடங்கி, பின்னர் தனது சொந்த பிராண்டுகளையும் சந்தைப்படுத்தியது.

இது 2009ல் சுமி நகரில் ஒரு உற்பத்தி ஆலையை அமைத்தது. இந்தக் குழுமம் உக்ரைன், உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் உட்பட 9-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 50 வகையான ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்கிறது.

சில காலமாக, ரஷியா மலிவான மற்றும் வேகமான ஷாஹெட் டிரோன்களைக் கொண்டு உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை இடைமறிப்பது உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com