

13 பேர் உயிரிழந்த ரியாத் விமான நிலைய தாக்குதல் சம்பவத்தின் பரபரப்பு வீடியோக்கள் வெளியாகி உள்ளன
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று முன் தினம் (அக்டடோபர் 10) ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் 13 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒரு இந்தியரும் அடங்குவார். அவரின் இரண்டு மகன்கள் காயமடைந்தனர்.
பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என இந்தியா உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில் அன்றைய தினம் ஏவுகணை தாக்குவாட்டியபோது விமான நிலையத்திற்குள் காத்திருப்பு பகுதியில் பயணிகள் அமர்ந்திருப்பதையும், ஏவுகணை தாக்குதலால் அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தையும் காட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
வீடியோவில் தெரியம் ஆரஞ்சு நிறத்தில் ஏற்படும் வெடிப்புக்கு பின் பலத்த வெடிச்சத்தம் கேட்க, பயணிகள் பீதியடைந்து அனைத்து திசைகளிலும் சிதறி ஓடுவது பதிவாகி உள்ளது.
மற்றொரு வீடியோவில் டெர்மினல் 3 இல் பயணிகள் இருந்தபோது ஏவுகணை தாக்குதல் நடந்து வெடிப்பு நிகழ்ந்தது பதவியாகி உள்ளது.
சனிக்கிழமையன்று சவுதி வெளியிட்ட அறிக்கையில், கொல்லப்பட்டவர்களில் நான்கு சவுதி குடிமக்கள், இரண்டு வங்கதேச நாட்டினர், ஒரு பாலஸ்தீனியர், ஒரு அமெரிக்கர், ஒரு எகிப்தியர், ஒரு ஜோர்டானியர், ஒரு சிரியர் மற்றும் ஒரு சூடானியர் ஆகியோர் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சனிக்கிழமை ரியாத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த இந்தியர் ஒருவர் நேற்று உயிரிழந்ததாகத் தெரிவித்தது.
"உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் அவரது உடலை விரைவில் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்" என்று தூதரகம் தனது பதிவில் தெரிவித்துள்ளது.
இதனிடையே நேற்று மீண்டும் ரியாத் கிங் காலித் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்த்தியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக சவுதி அறிவித்துள்ளது. ஏவப்பட்ட ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதில் சிலர் காயமடைந்ததாக சவுதி சிவில் விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்று சவுதியின் கிழக்கு பகுதியில் உள்ள தம்மாம் (Dammam) விமான நிலையம் மீதும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.