சிறைச்சாலை தாக்குதலுக்கு பதிலடி.. சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 73 பேர் காயம்

ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை தாக்குதல்
சிறைச்சாலை தாக்குதல்
Published on
Summary

ஏமன் நாட்டில் சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் பதிலடியாக சவுதி அரேபிய பகுதிகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 73 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏமனின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு அவர்கள் தனி அரசை உருவாக்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஏமனின் Jouf மாகாணத்தில் உள்ள Al Hazm நகர மத்திய சிறைச்சாலையின் மீது சவுதி அரேபியா நடத்திய விமான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாவும், ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல் அஸ்பஹி தெரிவித்துள்ளார்

தாக்குதலுக்குப் பிறகு கட்டிடம் முற்றிலும் இடிந்ததில், உள்ளே 35 கைதிகளும், தன் கணவரைப் பார்க்க வந்த ஒரு பெண்ணும் சிக்குண்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவுதிக்கள் பதிலடி

இதனிடையே ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியர்கள் தங்கள் நாட்டின் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஏமன் எல்லையை ஒட்டியுள்ள சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள சிவிலியன் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.

சவுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலையில் தெற்குப் பகுதிகளில் உள்ள பல எரிசக்தித் தளங்கள் தாக்கப்பட்டதில் குடிமக்கள் காயமடைந்ததாகவும், பல இடங்களில் தீப்பற்றியதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் ஹவுதிக்கள் இந்த தாக்குதல் குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.

ஹவுதி - சவுதி மோதல்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2014ஆம் ஆண்டு ஏமன் தலைநகரான சனா நகரத்தை கைப்பற்றி, அப்போதைய அரசாங்கத்தை வெளியேற்றினர்.

அதை தொடர்ந்து சவுதி தலைமையிலான கூட்டணி, ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவும், ஈரானின் முக்கிய கூட்டாளியான ஹவுதிக்களை எதிர்த்து போராடவும் தொடங்கியது.

இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ஏமன் அரசாங்க படைகளுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு போர் ஒப்பந்தம் போடப்பட்டது.

அண்மையில் ஹவுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரத்தில், ஈரான் நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிரங்க முயன்றது.

அப்போது ஏமன் அரசாங்கம் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்த போர் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து இவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஏமனில் உள்ள மேற்கு தைஸ் மற்றும் தெற்கு ஹொடைதா பகுதிகளில் ஹவுதிக்கள் தாக்குதலை நடத்தினர்.

பலி

இந்த தாக்குதலில் ஏமன் அரசாங்க படைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையை சேர்ந்த 129 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து ஏமனின் தென்மேற்கு பகுதியில் ஹவுதிக்கள் மீண்டும் நடத்திய தாக்குதலில், 26 ஏமன் அரசாங்க படையினரும், 31 ஹவுதி கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.

ஏமன் கடற்கரையோர துறைமுக நகரங்களை ஒட்டி அமைந்துள்ள, பாப் அல் மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில், ஹவுதிக்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் 24 முதல் இதுவரை நடைபெற்ற மோதல்களில் 1,078 பேர் உயிரிழந்துள்ளனர் .

கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கிய தீவிர மோதலின்பின் 21,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாப் அல் மண்டேப் ஜலசந்தி

சூயஸ் கால்வாய்க்கு செல்லும் கப்பல்களுக்கு பாப் அல் மண்டேப் ஜலசந்தி ஒரு முக்கியமான கடல்வழி தளமாக உள்ளது. உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.

அமெரிக்கா ஈரான் போர் தொடங்கிய பிறகு, சவுதி அரேபியா பல மாதங்களாக எண்ணெய் ஏற்றுமதி செய்ய இந்த பாப் அல் மண்டேப் ஜலசந்தியை பயன்படுத்தி வருகிறது.

மார்ச் 2026 முதல் ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட மூடப்பட்டதன் விளைவாக ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள உலகளாவிய பொருட்களின் விலையை, பாப் அல் மண்டேப் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது மேலும் அதிகரிக்க செய்யும் என அஞ்சப்படுகிறது.

ஹவுதிக்கள் அந்த துறைமுக நகரத்தை மீண்டும் கைப்பற்றி, செங்கடல் கடற்கரையோரமுள்ள முக்கிய பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால், அது செங்கடலில் நடைபெறும் கடற்படை போக்குவரத்தை கட்டுப்படுத்த அவர்களுக்கு வழிவகை செய்யும்.

X

Maalai Malar
www.maalaimalar.com