இந்தியாவின் பழமையான நாகரிகம் மற்றும் மொழி பன்முகத்தன்மையை பாராட்டிய புதின்

ஒருவருக்கொருவர் இணக்கமாகவும், காலப்போக்கில் ஒன்றிணைந்தும் வளர்ந்து வந்துள்ளனர்.
putin
Published on: 

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவின் பழமையான நாகரிகத்தையும் அதன் மொழி பன்முகத்தன்மையை வெகுவாக பாராட்டினார். இந்தியாவை பற்றி மேலும் அறியும்போது, ​​அதன் மீது தனக்குள்ள ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செர்பிய திரைப்பட தயாரிப்பாளர் எமிர் குஸ்துரிகாவிடம் அளித்த நேர்காணலில், "மிகவும் பழமையான இந்திய நாகரிகத்தை எடுத்துக்கொள்வோம். இது மிகவும் சுவாரஸ்யமானது. இதை பற்றி நான் எவ்வளவு அதிகமாக தெரிந்துகொள்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இதில் ஆர்வம் கொள்கிறேன்" என்று புதின் கூறினார்.

மோடி விளக்கம்:

இந்த நேர்காணலின் உரையை கிரெம்ளின் வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடியுடனான உரையாடலை நினைவு கூர்ந்த புதின், இந்தியாவில் எத்தனை பேர் முதன்மையான மொழியை பேசுகிறார்கள் என்று தான் அவரிடம் கேட்டதாக கூறினார்.

இந்தியாவின் 1.5 பில்லியன் மக்கள் தொகையில், சுமார் 600 மில்லியன் மக்கள் அந்த முதன்மையான மொழியை பேசுவதாக மோடி தன்னிடம் கூறியதாக ரஷிய அதிபர் தெரிவித்தார். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்கள் சொந்த மொழிகளை பேசுகிறார்கள் என்று மோடி விளக்கியதை அவர் நினைவு கூர்ந்தார்.

"இது ஆச்சரியமாக இல்லையா? உண்மையில் இது ஆச்சரியமானதுதான்!" என்று அந்த நேர்காணலில் புதின் கூறினார்.

இந்தியாவுக்கு என்று தேசிய மொழியோ அல்லது முதன்மையான மொழியோ இல்லை. இந்தி, இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழியாகும். இது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஒன்றாகும், மேலும் இது ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது.

பாரம்பரிய விழுமியங்கள்:

ரஷியாவின் மத பன்முகத்தன்மையையும் சுட்டிக்காட்டிய புதின், ரஷியா நான்கு பாரம்பரிய மதங்களை அங்கீகரிப்பதாக கூறினார் - அவை பௌத்தம், யூத மதம், இஸ்லாம் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவம் ஆகும். இந்த மதங்களை பின்பற்றுபவர்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாகவும், காலப்போக்கில் ஒன்றிணைந்தும் வளர்ந்து வந்துள்ளனர்.

வெவ்வேறு மதங்களாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே மாதிரியான "அடிப்படை விழுமியங்களைக்" கொண்டுள்ளன என்று அவர் கூறினார். இந்த விழுமியங்கள் செழித்து வளர்வதற்கான சூழலை ரஷியா வழங்குவதாகவும், இதன் மூலம் ரஷியா பாரம்பரிய விழுமியங்களை பாதுகாக்கும் ஒரு "பேழையாக" மாற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உக்ரைன் போர் குறித்து பேசிய புதின், உக்ரைனிய வீரர்கள் ரஷிய தரப்பில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். "அவர்கள் சரணடைய வேண்டும் என்று நான் கூற விரும்பவில்லை, ஏனெனில் அது ஒருவித அவமானகரமான செயலாக தோன்றலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு பதிலாக, அவர்கள் எங்கள் தரப்பிற்கு வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்; ஏனெனில் இது நம் இரு தரப்புக்கும் பொதுவான பக்கம் – மேலும் இது வரலாற்றின் சரியான பக்கமும் கூட," என்று ரஷ்ய அதிபர் கூறினார்.

X