சீனாவில் ட்ரெண்டாகும் நாய், பூனைகளுக்கான 'மூன்கேக்' - செல்லப் பிராணிகளுக்கும் நிலாப்பண்டிகை பலகாரம்!

கடந்த ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரையிலான காலகட்டத்தில் மூன்கேக் விற்பனை வருவாய் 45% சரிந்துள்ளது.
Mooncakes For Pets
Published on: 
Summary

சீனாவின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான 'மிட்-ஆட்டம் ஃபெஸ்டிவல்' - நிலாப்பண்டிகை கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய மாற்றமாக, மனிதர்கள் தங்களின் இனிப்பு நுகர்வைக் குறைத்துக் கொண்டு வரும் வேளையில், வளர்ப்பு நாய் மற்றும் பூனைகளுக்கான பிரத்யேக மூன்கேக்குகள் சீனாவில் வரலாறு காணாத வகையில் விற்பனையாகி வருகின்றன.

சாம்ஸ் கிளப் போன்ற முன்னணி சில்லறை விற்பனை நிலையங்கள் முதல் ஆன்லைன் தளங்கள் மற்றும் சிறிய பேக்கரிகள் வரை இந்தச் செல்லப் பிராணிகளுக்கான கேக்குகள் தட்டுப்பாடின்றி விற்றுத் தீர்ந்து வருகின்றன.

என்னென்ன சுவைகளில் கிடைக்கின்றன?

செல்லப் பிராணிகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு சர்க்கரை மற்றும் எண்ணெய் இல்லாமல், முற்றிலும் இறைச்சி மற்றும் பழங்களைக் கொண்டு இவை தயாரிக்கப்படுகின்றன.

ஆன்லைனில் 4 கேக்குகள் கொண்ட ஒரு பேக் சுமார் 50 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.600 வரை விற்கப்பட்டு, ஆயிரக்கணக்கான ஆர்டர்களைக் குவித்து வருகிறது. உறைந்து உலரவைக்கப்பட்ட நாய் மூன்கேக்குகள் பிரபலமாக உள்ளன.

புளுபெர்ரியுடன் கலந்த வாத்து இறைச்சி, முட்டை மஞ்சள் கருவுடன் கலந்த சால்மன் மீன் இறைச்சி, மற்றும் கோழி இறைச்சி ஆகிய சுவைகளில் இவை கிடைக்கின்றன.

சீனாவின் இந்த புதிய ட்ரெண்ட் குறித்து குவாங்சோவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஹி யுகி கூறும்போது, "இந்த ஆண்டு ஆன்லைனில் செல்லப் பிராணிகளுக்கான மூன்கேக் விளம்பரங்களைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.

அதனால் எனது இரண்டு நாய்களுடன் பண்டிகையைக் கொண்டாட, அருகில் உள்ள பேக்கரியில் பிரத்யேக சைவ மூன்கேக்குகளை ஆர்டர் செய்து வாங்கினேன்," என்றார்.

அசுர வளர்ச்சியடையும் செல்லப்பிராணிகள் சந்தை

சீனாவில் நுகர்வோர் நடத்தை பெருமளவு மாறியுள்ளதை இது காட்டுகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சீனாவின் நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனைகளின் எண்ணிக்கை 12.6 கோடியை எட்டியுள்ளது.

மேலும், பிராணிகளுக்காக உரிமையாளர்கள் செலவிடும் தொகை 312.6 பில்லியன் யுவானைத் தாண்டியுள்ளது. இது வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் 405 பில்லியன் யுவானாக உயரும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மனிதர்களுக்கான பாரம்பரிய மூன்கேக் விற்பனை கடும் சரிவு

மறுபுறம், அதிக சர்க்கரை மற்றும் எண்ணெய் கொண்ட மனிதர்களுக்கான பாரம்பரிய மூன்கேக்குகளின் விற்பனை சீனாவில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

'எஃப்.எம்.சி.ஜி சைனா' தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரையிலான காலகட்டத்தில் மூன்கேக் விற்பனை வருவாய் 45% சரிந்துள்ளது. ஆடம்பரப் பரிசுப் பெட்டிகளின் விற்பனை 49% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

முன்பெல்லாம் நிறுவனங்கள் தங்களின் அந்தஸ்தைக் காட்ட ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் 1,000 யுவானுக்கும் அதிகமான ஆடம்பர மூன்கேக் பெட்டிகளைப் பரிசளிப்பார்கள்.

ஆனால், தற்போது சீனாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் குறைத்துக் கொண்டுள்ளன. பெரும்பாலான மக்கள் இப்போது 68 முதல் 200 யுவான் மதிப்பிலான எளிய மூன்கேக்குகளையே வாங்குகின்றனர்.

புதிய சுவைகளைத் தேடும் மக்கள்

பாரம்பரிய இனிப்புகளுக்குப் பதிலாக, உடல்நலத்திற்கு உகந்த பார்லி மற்றும் மூலிகை தேநீர் கலந்த குறைந்த சர்க்கரை கொண்ட மூன்கேக்குகளை மக்கள் விரும்புகின்றனர்.

அதுமட்டுமின்றி, 'ஸ்டிங்கி டோஃபு' மற்றும் நத்தையூடு கொண்டு செய்யப்படும் காரசாரமான 'லுவோசிஃபென்' போன்ற விசித்திரமான சுவைகளில் உள்ள மூன்கேக்குகளை சீன இளைஞர்கள் இந்த ஆண்டு அதிகளவில் வாங்கியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com