

பனாமாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களை பீதியில் ஆழ்த்தியது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் மையப்பகுதியில் கட்டிடங்களும் சாலைகளும் இடிந்து விழுந்தன, ஆனால் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தேசிய குடிமை பாதுகாப்பு அமைப்பின்படி, சுமார் 45 லட்சம் மக்கள் வசிக்கும் அந்த மத்திய அமெரிக்க நாடு முழுவதும் இந்த ஆழமற்ற நில அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கம் மையத்தில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனாமா நகரில், அந்நகரின் அடையாள சின்னமான வானளாவிய கட்டிடங்களில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேறியதால், அங்கு பீதி நிறைந்த காட்சிகள் காணப்பட்டன.
பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முலினோ வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தை ஒரு "பெரும் பேரழிவு" என்று குறிப்பிட்டதுடன், அது நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சாலைகளை அழித்துவிட்டதாகவும் கூறினார். இந்த நில அதிர்வினால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றி முலினோ குறிப்பிடவில்லை.
"நிலநடுக்கம் மிகவும் வலுவாகவும் நீண்ட நேரமாகவும் இருந்ததால் நான் பயந்து போனேன். அலமாரிகள், படுக்கை மற்றும் சமையலறை பொருட்கள் போன்ற கனமான பொருட்கள் அனைத்தும் அதிர்ந்தன," என்று நில அதிர்வுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாகத் தனது 15 மாடிக் கட்டிடத்தை விட்டு வெளியேறிய 46 வயதான சாலமன் ஆண்டியோன், ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு காணொளியில், 20 மாடிகளுக்கும் மேல் உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மொட்டைமாடி நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவது காட்டப்பட்டது. மற்றொரு காட்சியில், பனாமா கால்வாயின் மீதான ஒரு பாலம், அதன் மீது வாகனங்கள் பயணித்தபோது கடுமையாக அதிர்ந்தபோதிலும் நிமிர்ந்து நின்றது.
"அது நாங்கள் இதுவரை அனுபவித்திராத ஒரு கொடூரமான அனுபவமாக இருந்தது. என் மகள் பள்ளியில் சிக்கிக்கொண்டாள்," என்று மத்திய கோக்லே மாகாணத்தில் உள்ள பெனோனோமே நகரில் ஒரு கடையில் காசாளராகப் பணிபுரியும் 38 வயதான ஜுவானா அல்வியோ, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மத்திய ஹெர்ரெரா மாகாணத்தில் உள்ள பிட்டலோசா அரிபா என்ற சிறிய நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் (6 மைல்) தொலைவில் மையப்புள்ளியைக் கொண்டு, இந்த நிலநடுக்கம் கிரீன்விச் நேரம் 1756 மணிக்கு ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யு.எஸ்.ஜி.எஸ் ஆரம்பத்தில் இதை 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் என மதிப்பிட்டு, பின்னர் அதை 7.7 ஆகத் திருத்தியது. கிழக்கு பசிபிக் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களை இணைக்கும் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படாமல் "வழக்கம் போல்" இயங்கி வருவதாக பனாமா கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.