

இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 'நாகரிக உரையாடல் மன்றம்' கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதி முடிவை எடுக்கப்போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் தனது வாராந்திர ஊடக சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
"நிறுவன ரீதியான ஆலோசனைகளுக்கு பிறகு, நாட்டின் தலைமை இது குறித்து இறுதி முடிவை எடுக்கும்" என்று அவர் கூறினார்.
இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மன்றத்திற்கு, பாகிஸ்தான் உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்கு பிறகு, பாகிஸ்தானின் மூத்த அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சிக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வழக்கமான நடைமுறையின்படி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா அக்டோபர் 28 அன்று அறிவித்திருந்தது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) என்பது இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு யூரேசிய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், பாகிஸ்தானுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து, மே 07-ஆம் தேதியன்று இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியது; இது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டிருந்தது.
இந்த ராணுவ மோதல் நான்கு நாட்கள் நீடித்தது, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட புரிதலின் அடிப்படையில் மே 10-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.