

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தின.
ஏமன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாப்-அல்-ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியானது கச்சா எண்ணெய் மற்றும் வணிக கப்பல்கள் செல்லும், முக்கிய வர்த்தக போக்குவரத்து தளமாக உள்ளது.
இதற்கிடையில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை கைப்பற்றும் நோக்கில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா ராணுவ தாக்குதல் நடத்தி வரும் சூழலில், சவுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய புனித தளங்களான மெக்கா மற்றும் மதினா ஆகியவற்றின் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர்.
மேலும் சவுதியின் முக்கிய நகரங்கள் மீதும், விமான நிலையங்கள் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எவுகணை தாக்குதல்களை நடத்தினர்.
இந்த நிலையில் ஹவுதிகளின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, இன்று பாகிஸ்தானில் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துகொண்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், 600 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில், இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 279 பேர் வாக்களித்ததுள்ளதாக தெரிவித்தார்.
இதன்மூலம் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், சவுதிக்கு ஆதரவாக துருக்கி ராணுவம் விரைவில் போர் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிஃப், ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து சவுதி அரேபியாவை பாதுகாக்க அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் பயன்படுத்தும் என கூறினார்.