

ஆரம்பத்தில் ராசா தார் மற்றும் அவரது நண்பர்களுக்கு காவல்துறை 'கிளீன் சிட்' வழங்கிவிட்டு, அவரது நிறுவனத்தில் வேலை செய்த குறைந்த சம்பளம் பெறும் மூன்று ஊழியர்கள் மீது மட்டுமே பலாத்காரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது.
பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரின் பேரன் முஹம்மது ராசா தார் உள்ளிட்ட எட்டு பேர் மீதும் லாகூர் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
லாகூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரபாகத் அலி கோண்டல் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதனையடுத்து, இவ்வழக்கின் முறையான விசாரணையைத் தொடங்குவதற்காக டிசம்பர் 9ஆம் தேதிக்குள் சாட்சிகளை ஆஜர்படுத்தும்படி அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி அட்நானா மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த அஸ்ட்ரிட் ராபின்சன் ஆகிய இரண்டு வெளிநாட்டுப் பெண்கள்தான் இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஆளாகினர். கடந்த 2025ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வைத்து இவர்களுடன் அறிமுகமான ராசா தார், இவர்களின் கிரிப்டோகரன்சி வணிகத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தார். ஆனால், அந்தப் பெண்களுக்குரிய லாபத் தொகையையோ அல்லது முதலீட்டுத் தொகையையோ திரும்பத் தராத காரணத்தினால், கடந்த ஜூன் மாதம் மற்றொரு முதலீட்டாளரை சந்திப்பதாகக் கூறி அந்தப் பெண்களை பாகிஸ்தானுக்கு ராசா தார் வரவழைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, லாகூரில் உள்ள பாதுகாப்பு வீட்டுவசதி ஆணைய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்கள், ஆயுதங்களைக் காட்டி மிரட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டதாகவும், கட்டாயப்படுத்தி பணம் பறிக்கப்பட்டதாகவும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து தப்பிய அவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறி புகார் அளித்தனர்.
இவ்வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையின் போது, துணைப் பிரதமர் இஷாக் தாரின் குடும்பத்தினரைக் காப்பாற்றும் வகையில் பஞ்சாப் காவல்துறை செயல்பட்டதாகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. ஆரம்பத்தில் ராசா தார் மற்றும் அவரது நண்பர்களுக்கு காவல்துறை 'கிளீன் சிட்' வழங்கிவிட்டு, அவரது நிறுவனத்தில் வேலை செய்த குறைந்த சம்பளம் பெறும் மூன்று ஊழியர்கள் மீது மட்டுமே பலாத்காரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்களின் மருத்துவப் பரிசோதனைகளில் அவர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியான நிலையில், தற்போது நீதிமன்றத்தின் தீவிர மேற்பார்வையில் இஷாக் தாரின் பேரன் உட்பட எட்டு பேர் மீதும் முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் வாக்குமூலம் அளித்த பிறகு ஏற்கனவே தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்ட நிலையில், இந்த உயர்மட்ட வழக்கு பாகிஸ்தானில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.