பெண்கள் கட்டாயம் நிகாப் அணிய வேண்டும்: ஓமன் விமானியின் வலைதள பதிவுகளை வெளியிட்ட அதிகாரிகள்

ஹமாமியை சவுதியில் கைது செய்த அதிகாரிகள், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Oman Pilot Al-hammami
Published on: 
Summary

ஃப்ளைதுபாய் விமானத்தில் இந்திய விமானியின் மீது தாக்குதல் நடத்திய ஓமன் துணை விமானியை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், தற்போது அவரின் சமூக ஊடக பதிவுகளை அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற பயணிகள் விமானத்தை கடத்தும் நோக்கில், ஓமன் துணை விமானியான ஹமாம் அல்-ஹமாமி செயல்பட்டார்.

அப்போது அவரை சவுதியில் கைது செய்த அதிகாரிகள், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதள பதிவுகள்

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஹமாமியின் எக்ஸ் மற்றும் லிங்க்ட் இன் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளில் நீக்கிய பதிவுகளை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஓமன் விமானி ஹமாமியின் 2021 முதல் 2022 வரையிலான வலைதள பதிவுகளை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சொற்பொருள் தேடல் மாதிரியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.

இந்த காலகட்டத்தில் சுமார் 3,000 பதிவுகள் பதிவிடப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் வெறுப்புணர்வு சர்ச்சை

இதுகுறித்து ஓமன் விமானி ஹமாமி வெளியிட்ட ஒரு பதிவில், தனது வருங்கால மனைவியை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிரமங்களை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனது வருங்கால மனைவி திருமணத்திற்கு பிறகு கட்டாயம் நிகாப் அணிய வேண்டும் என்றும், மேலும் வேலை பார்த்து வந்தால், அந்த வேலையை விட்டுவிட வேண்டும் என்றும் தனது அம்மாவிடம் கூறியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

ஹமாமி விதித்த நிபந்தனைகளை பெண் வீட்டார்கள் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும், அதன்பிறகு தனது அம்மா பெண் வீட்டார்களிடம், தான் ஒரு விமானி என்று கூறிய பிறகே அவர்கள் சம்மதித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

ஹமாமியின் நீக்கப்பட்ட மற்றொரு பதிவில், பணியிடங்களில் ஆண்கள் வேலை பார்க்கும் இடங்களில் பெண்கள் வேலை பார்ப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்கள் வேலை செய்யும் பணியிடங்களில், பெண்களும் வேலை செய்வதால் கலாச்சார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவத்துள்ளார்.

விமான கடத்தல் தொடர்பான பதிவு

இதையடுத்து கடந்த புதன்கிழமை ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்தும், ஹமாமியின் லிங்க்ட்-இன் கணக்கில் இரண்டு பதிவுகள் பதிவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு விமான கடத்தல் சம்பவம் நடந்த சுமார் 9 மணி நேரத்திற்கு பிறகு பதிவிடப்பட்டுள்ளதால், அந்த பதிவை முன்கூட்டியே இணையத்தில் பதிவாகும் வகையில், அவர் திட்டமிட்டிருந்தாரா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹமாமி கணக்கில் உள்ள அந்த பதிவில், போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் விமானி அறைக்காட்சிகளும், இஸ்ரேல் விமான நிறுவனங்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.

மேலும் அவர் வெளியிட்ட காணொளி ஒன்றில், முன்னாள் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி மற்றும் 2009-ஆம் ஆண்டு தற்கொலை தாக்குதல்களை நடத்திய ஹூமம் கலீல் அபு முலால் அல் பலாவி ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

2009-ல் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 7 புலனாய்வு அதிகாரிகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

புனித நகரங்களின் புகைப்படங்கள்

ஹமாமி வெளியிட்ட மற்றொரு காணொளியில் இஸ்லாமின் மூன்று புனித தளங்களான மக்கா, மதீனா மற்றும் ஜெருசலேம் ஆகிய தலங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் அந்த பதிவில், அவமானத்தை நிராகரிப்பது, மரணத்துக்கு அஞ்சாமல் இருப்பது மற்றும் ஒருவரின் கண்ணியத்தை பாதுகாப்பது பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக பயங்கரவாத கருத்துகள் கொண்ட பதிவுகளை விமானி ஹமாமி தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டு வந்ததால், ஓமனில் விமானம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் விமானி ஹமாமி, ஃப்ளைதுபாய் விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆவண சரிபார்ப்புகளை எவ்வாறு சமாளித்தார் என்று தற்போது வெளிவந்துள்ள அறிக்கைகள் கேள்வி எழுப்பியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com