இனி 'AI' அல்ல...'சூப்பர் இன்டலிஜென்ஸ்': அமெரிக்க அரசு நிர்வாகத்தில் புதிய பெயரை அறிமுகம் செய்தார் டிரம்ப்

இனி 'செயற்கை நுண்ணறிவு' என்ற சொல் கூட்டாட்சி நிர்வாகத்தில் பயன்படுத்தப்படாது.
Super Intelligence
Published on: 
Summary

உச்சிமாநாட்டின் போது 'ஒயிட் ஹவுஸ் அக்கார்ட் ஆன் சூப்பர் இன்டலிஜென்ஸ்' என்ற தன்னாட்சி பாதுகாப்பு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட 'சூப்பர் இன்டலிஜென்ஸ்' உச்சிமாநாடு நடைபெற்றது. மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தாரியோ அமோடே மற்றும் ஓபன்ஏஐ தலைவர்கள் உட்பட உலகளாவிய தொழில்நுட்ப உலகின் முக்கியப் பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டமைப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் எட்டப்பட்ட மிக முக்கிய முடிவாக, இனி 'செயற்கை நுண்ணறிவு' என்ற சொல் கூட்டாட்சி நிர்வாகத்தில் பயன்படுத்தப்படாது என்றும், அதற்குப் பதிலாக 'சூப்பர் இன்டலிஜென்ஸ்' என்ற புதிய பெயர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். இதற்கான சிறப்பு நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். தற்போதைய தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட திறன்களுக்கு 'செயற்கை' என்ற சொல் பொருத்தமாக இல்லை என்றும், இணைய புரட்சியை விட இது மிகப் பெரியது என்றும் தெரிவித்த டிரம்ப், புதிய பெயரை சட்டப்பூர்வமாக வரையறுக்க 60 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து கூட்டாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவது அல்லது பகிர்வது என்ற கருத்தை அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்தார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு 'சூப்பர் இன்டலிஜென்ஸ்' துறையில் உலகளவில் முதலிடத்தில் இருப்பதே மிக முக்கியமானது என்றும், இதில் சர்வதேசப் போட்டியை எதிர்கொண்டு அமெரிக்கா தொடர்ந்து முதன்மை சக்தியாகத் திகழும் என்றும் இக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.

ஒயிட் ஹவுஸ் அக்கார்ட்' பாதுகாப்பு ஒப்பந்தம்

உச்சிமாநாட்டின் போது 'ஒயிட் ஹவுஸ் அக்கார்ட் ஆன் சூப்பர் இன்டலிஜென்ஸ்' என்ற தன்னாட்சி பாதுகாப்பு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பங்களை பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் உருவாக்குவதை உறுதிசெய்ய தொழில் நிறுவனங்கள் தார்மீக ரீதியாக கட்டுப்பட ஒப்புக்கொண்டன. மேலும், நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட தரவு மையங்களுக்கு உள்ளூர் அளவில் எழும் எதிர்ப்புகளைக் கையாள்வது குறித்தும் பேசப்பட்டது. உள்ளூர் சமூகங்களுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் நிதி உதவிகளை வழங்கி, அமெரிக்காவிற்குள்ளேயே உள்கட்டமைப்பை விரைவுபடுத்த அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று டிரம்ப் உறுதியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com