

குழாயில் இருந்து மிக அதிக அழுத்தத்துடன் எரிபொருள் பாயும்போது "இண்டோராமா கெமிக்கல்" என்ற நச்சு வாயு காற்றில் பலமாக பரவியது.
நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள ஒக்ரிகா பகுதிக்கு உட்பட்ட ஒகாரி ஜெட்டி அருகே, சட்டவிரோதமாக எரிபொருள் திருடும் முயற்சியின் போது ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் 37 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறிய படகுகளில் ஒகாரி ஜெட்டி பகுதியில் ஒன்று திரண்டனர். இந்திரமா எலமே பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திலிருந்து போர்ட் ஹார்கோர்ட் சுத்திகரிப்பு நிலையம் வழியாக ஏற்றுமதிக்கு கொண்டு செல்லப்படும் பிரதான எரிபொருள் குழாயில் சட்டவிரோதமாக துளையிட்டு எரிபொருளை திருட முயன்றுள்ளனர்.
குழாயில் இருந்து மிக அதிக அழுத்தத்துடன் எரிபொருள் பாயும்போது "இண்டோராமா கெமிக்கல்" என்ற நச்சு வாயு காற்றில் பலமாக பரவியது. இதனால் அங்கிருந்த இளைஞர்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
மயக்கமடைந்த பல இளைஞர்கள் போனி நதியில் விழுந்தனர். இதுவரை 37 பேரின் உடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலரின் உடல்கள் ஆற்றில் மிதந்து கொண்டு இருப்பதாகவும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து ரிவர்ஸ் மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நைஜீரியாவில் நிலவும் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக இது போன்ற சட்டவிரோத எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.