காசாவில் ஹமாஸ் மூத்த தலைவர் கைது - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கவும் செயல்பட்டது.
Benjamin Netanyahu
Published on

காசாவில் நடைபெற்ற தரைவழி நடவடிக்கையின்போது ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவரை இஸ்ரேலிய படைகள் கைது செய்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இந்த நடவடிக்கையில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் கூறியிருந்தனர்.

காசாவில் உள்ள ஹமாஸின் உள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரே இலக்கு என்று பிரதமர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார், ஆனால் அவர் மேலதிக விவரங்களை அளிக்கவில்லை. இஸ்ரேலிய ஊடகங்கள் அவரை முயின் அல்-அராபித் என அடையாளம் காட்டின.

பல இலக்குகளில் தாக்குதல்:

ராணுவமும் ஷின் பெட் உள்நாட்டுப் பாதுகாப்பு சேவையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இலக்கு வைக்கப்பட்ட அமைப்பு "சமீபத்தில் வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கவும் செயல்பட்டது" என்று தெரிவித்துள்ளன.

மேலதிக விசாரணைக்காக அவர் இஸ்ரேலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தரைவழி நடவடிக்கையுடன் இணைந்து, தனது படைகளுக்கு இருந்த அச்சுறுத்தல்களை அகற்றும் நோக்கில் அப்பகுதியில் உள்ள பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

12 தாக்குதல்கள்:

காசா பகுதிக்குள் இருந்த இஸ்ரேலுடன் கூட்டணி வைத்துள்ள போராளி குழுவும் அந்த படைகளில் அடங்கியிருந்தது என்று காசா பாதுகாப்பு வட்டாரம் ஒன்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

மேற்கு காசா நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் பன்னிரண்டு தாக்குதல்கள் நடந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன. அங்கு மூன்று குழந்தைகளும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக அப்பகுதியின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு கூறியது; கொல்லப்பட்டவர் அரபித்தின் மனைவி என பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸின் கீழ் மீட்புப் படையாகச் செயல்படும் குடிமைப் பாதுகாப்புப் படையினர் அளித்த உயிரிழப்பு எண்ணிக்கையை காசா நகரத்தின் அல்-ஷிஃபா மருத்துவமனை உறுதிப்படுத்தியது.

தாக்குதல்களுக்குப் பிந்தைய ஏ.எஃப்.பி. காணொளி காட்சிகளில், சவத்துணிகளால் போர்த்தப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல்கள் தெருக்களின் வழியே எடுத்துச் செல்லப்படுவதும், அங்கு ஒரு வாகனத்தின் சிதைந்த பாகங்கள் கிடந்ததும் பதிவாகியிருந்தன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com