

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடலில் அடையாள அட்டையும் இருப்பிட எண்ணும் இடப்பட்டு, நெகிழிப் பையில் சுற்றப்பட்டு, பின்னர் குழியில் புதைக்கப்படுகிறது. அதற்கு முன்பு, அதில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன.
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள சூழலில் மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட உடல்களை பாதுகாப்பது அதிகாரிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
வெள்ள நீர் வடிந்த பிறகு அனைத்தையும் மூழ்கடித்த, தார் போன்ற அடர்த்தியான சேற்றில் இருந்து நூற்றுக்கணக்கான உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.
அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்களுடன், வீடுகளில் இருந்து பல மைல்கள் தொலைவில் கண்டெடுக்கப்படும் உடல்களை அடையாளம் காணும் பணியால் தாங்கள் திணறி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்கள் தீர்ந்து வருவதால், பரத்பூர் மாவட்டத்தில் பல உடல்களை ஒரே இடத்தில் புதைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு உடலுக்கும் அடையாள அட்டையும் இருப்பிட எண்ணும் இடப்பட்டு, நெகிழிப் பையில் சுற்றப்பட்டு, பின்னர் குழியில் புதைக்கப்படுகிறது. அதற்கு முன்பு, அதில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்த உடல்கள் காலப்போக்கில் உறவினர்களால் டி.என்.ஏ மூலம் அடையாளம் காணப்பட்டு, முறையான இறுதிச் சடங்குகளுக்காக மீட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ. பகுப்பாய்வும் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நேபாள அதிகாரிகளுக்கு உதவுவதற்காக இந்தியாவில் இருந்து 19 பேர் கொண்ட சிறப்பு தடயவியல் குழு காத்மாண்டு சென்றுள்ளது.
அடையாளம் காணும் பணியை விரைவுப்படுத்தும் முயற்சியாக இறந்தவர்களின் படங்களைப் பார்த்து, கழுத்தணி, திருமண மோதிரம், பச்சைக்குத்து, தழும்பு போன்ற அடையாள அம்சங்களைத் தேடுமாறு மக்களை நேபாள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள், உறவினர்கள் பொறுமையாகப் பார்ப்பதற்காக பவர்பாயிண்ட் ஸ்லைடு ஷோக்களில் வைக்கப்பட்டு, நேபாள காவல்துறை இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டு உள்ளன. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள சவக்கிடங்கிற்கு வெளியே, உள்ளே இருக்கும் இறந்தவர்களின் புகைப்படங்கள் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன.
சேறு, நீர் மற்றும் இடிபாடுகளால் முழு கிராமங்களும் அடித்துச் செல்லப்பட்ட, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை, ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மட்டுமே இன்னும் அணுக முடிகிறது. இறந்தவர்களின் உடல்களை வைப்பதற்காக நேபாள அரசாங்கம் “1,000-க்கும் மேற்பட்ட குளிர்பதனப் பெட்டிகளை கோரியுள்ளது.