

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ள பேரிடருக்கு பிறகு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடந்து வரும் நிலையில், அடர்த்தியான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஆறு வயது சிறுமியை மீட்பு படையினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
நேபாளத்தில் சமீபத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள பேரிடரில், அங்கு உள்ள ரசுவா மாவட்டம் அதிகமாக பாதிப்புக்குள்ளானது.
இதையடுத்து ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே கிராமத்தில் மீட்பு பணி நடைபெற்ற போது, கட்டிட இடுபாடுகளுக்கு அடியில் மெல்லிய அழுகுரலை ஆயுத காவல் படையினர் கேட்டுள்ளனர்.
அப்போது மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு, அந்த இடத்தை தோண்ட தொடங்கினர். இதையடுத்து அந்த இடத்தில் மண்ணுக்கு அடியில் சிக்கியிருந்த ஆறு வயது பெண் குழந்தையை மீட்பு படையினர் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு திமுரேயில் உள்ள விமானப்படை எல்லை சாவடியில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனால அந்த குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், விமானம் மூலம் காத்மாண்டுவுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர்.
இருப்பினும் மோசமான வானிலை காரணமாக, அந்த விமானம் புறப்பட தாமதமானது.
பின்னர் வானிலை சீரானதை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் அந்த குழந்தையை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அழைத்து சென்றனர்.
காத்மாண்டுவில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஆறு வயது குழந்தையை மீட்ட மீட்பு படையினரின் செயல் சமூக வலைதளத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
நேபாளத்தில் தொடர்ந்து இரவிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் ஆயுத காவல் படை குழுவினருக்கு பயனர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.