நேபாள வெள்ளப் பேரழிவு: சேமிப்பு உண்டியலை வழங்கி மனங்களை வென்ற 10 வயது இந்திய சிறுவன்

"கடவுள் இந்தச் சிறுவனை ஆசீர்வதிக்கட்டும்", "உண்மையான மனிதநேயம் எல்லைகளைத் தாண்டியது"
 Nepal Donating
Published on
Summary

யூடியூப் மற்றும் செய்திகளில் நேபாள வெள்ளத்தின் சீற்றத்தையும், அங்கு வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் கண்ணீரையும் பார்த்த அல்ஃபாஸ், மிகுந்த வேதனையடைந்தான்.

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களின் துயரச் செய்திகள் உலகெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சோகமான சூழ்நிலையிலும், மனிதநேயத்தின் உன்னதத்துவத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

துயரம் கண்டு உருகிய இளம் மனம்

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பெட்டியா கிராமத்தைச் சேர்ந்த இம்ரான் அலி சித்திக்கியின் 10 வயது மகன் அல்ஃபாஸ் ஷேக். ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுவன், கடந்த ஒரு ஆண்டாகத் தனது சொந்தத் தேவைகளுக்காகச் சிறுகச் சிறுக உண்டியலில் பணம் சேமித்து வந்துள்ளான்.

யூடியூப் மற்றும் செய்திகளில் நேபாள வெள்ளத்தின் சீற்றத்தையும், அங்கு வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் கண்ணீரையும் பார்த்த அல்ஃபாஸ், மிகுந்த வேதனையடைந்தான். தான் சேமித்து வைத்த தொகையைக் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தனது எண்ணத்தை வீட்டாாரிடம் தெரிவித்தான். சிறுவனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினரும் அவனுக்கு முழு ஆதரவு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்ட உண்டியல்

தனது தந்தையுடன் குஷிநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற அல்ஃபாஸ் ஷேக், தான் ஆசையோடு சேமித்து வைத்திருந்த பண உண்டியலை மாவட்ட ஆட்சியர் மகேந்திர சிங் தன்வாரிடம் ஒப்படைத்தான். தான் சேமித்த தொகை நேபாளத்தில் துயருறும் மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தான்.

சிறுவனின் இச்செயலைக் கண்டு நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர், உண்டியலில் உள்ள தொகையை விடச் சிறுவனின் உன்னதமான எண்ணமே முதன்மையானது எனக் கூறி, அதை உடனடியாக எண்ணாமல் மதிப்பளித்தார். இந்த உதவித்தொகை உரிய அரசு வழிமுறைகள் மூலம் நேபாள நிவாரண நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

சிறுவன் அல்ஃபாஸின் இந்த அன்பு மற்றும் கருணைமிக்க செயல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. "கடவுள் இந்தச் சிறுவனை ஆசீர்வதிக்கட்டும்", "உண்மையான மனிதநேயம் எல்லைகளைத் தாண்டியது" எனப் பலரும் சிறுவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கத் தான் சேமித்த முழுப் பணத்தையும் தயங்காமல் வழங்கிய சிறுவன் அல்ஃபாஸ் ஷேக், எதிர்காலத்தில் தான் என்னவாக வளர்ந்தாலும் ஆபத்தில் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து உதவுவதே தனது லட்சியம் எனக் கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.

X

Maalai Malar
www.maalaimalar.com