நேபாள வெள்ளப் பேரழிவு: சத்தீஸ்கர் நண்பர்கள் 5 பேரின் உயிரைக் காப்பாற்றிய ஒரு டீ இடைவேளை!

இணைய வசதி சீராக இருந்ததால், இந்திய அரசின் உதவி மையத்தையும் குடும்பத்தினரையும் தொடர்புகொண்டு தங்களின் இருப்பிடத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
Nepal Flood
Published on

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து நண்பர்கள் மிக நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ம் தேதி அன்று வழியில் அவர்கள் எடுத்துக்கொண்ட 10 முதல் 15 நிமிட டீ இடைவேளையே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் அவர்களைக் காப்பாற்றிய அற்புதத் தருணமாக மாறியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ் மற்றும் தினேஷ் சிங் தாக்குர் ஆகிய ஐந்து பேரும் நேபாளத்தின் பசுபதிநாத் கோயில் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப் பார்க்க வாடகை காரில் பயணம் மேற்கொண்டனர். ஆகஸ்ட் 26 அன்று காலை தாடிங் மாவட்டத்தில் உள்ள மலேகு பகுதியில் அவர்கள் டீ குடிப்பதற்காக ஒரு விடுதியில் காரை நிறுத்தினர்.

அந்தச் சில நிமிட இடைவெளியில், அவர்கள் செல்லவிருந்த பாதையில் இருந்த மேம்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செய்தி அவர்களுக்குத் தெரியவந்தது. சற்று நேரத்திற்கு முன்பே புறப்பட்டிருந்தால் தங்களின் நிலையும் பரிதாபமாகியிருக்கும் என அவர்கள் உறைந்துபோயினர்.

காரிலேயே கழிந்த இரவுகள்

மேம்பாலம் உடைந்ததால் பயணம் முடங்கிய நிலையில், மலேகு பகுதியில் உள்ள உயரமான பாதுகாப்பான இடத்திற்கு அவர்கள் தப்பிச் சென்றனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியின்றி, தங்கள் வாடகை காரிலேயே இரவுகளைக் கழித்தனர். அவர்களின் கண்முன்னே பொங்கி வழிந்த திரிசூலி ஆற்றில் கார்களும், கட்டிடக் கழிவுகளும் அடித்துச் செல்லப்பட்ட கொடூரமான காட்சிகளை அவர்கள் அதிர்ச்சியுடன் கண்டனர். உள்ளூர் இந்திய உணவக உரிமையாளர் மற்றும் காவல் துறையினரின் உதவியால் அவர்களுக்கு உணவும் பாதுகாப்பும் கிடைத்தன.

இணைய வசதி சீராக இருந்ததால், இந்திய அரசின் உதவி மையத்தையும் குடும்பத்தினரையும் தொடர்புகொண்டு தங்களின் இருப்பிடத்தைப் பகிர்ந்துகொண்டனர். ஆபத்தான சூழலிலும் சிவபெருமானின் பெயரை உச்சரித்தபடி பயத்துடன் காலத்தைக் கழித்த அவர்கள், ஆகஸ்ட் 28 அன்று நேபாளத்திலிருந்து புறப்பட்டு சத்தீஸ்கரில் உள்ள தங்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். ஒரு சிறிய டீ இடைவேளை தங்களின் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியமைத்து உயிரைக் காப்பாற்றியதை மறக்க முடியாது என அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com