நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இங்கிலாந்து பயணிகள் - டிக்டாக் வீடியோ மூலம் இருப்பிடத்தை தேடிய மகள்

நேபாளத்தில் காணாமல் போன தாய் மற்றும் அத்தையை டிக்டாக் வீடியோ மூலம் மகள் தேடி வருகிறார்.
UK Tourists Missing in Nepal Floods
Published on

இங்கிலாந்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தனது தாய் மற்றும் அத்தை பெருவெள்ள பேரிடரில் சிக்கி காணாமல் போனதையடுத்து, அவர்கள் கடைசியாக எடுத்த டிக்டாக் வீடியோ மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, அவர்களை தொடர்ந்து தேடி வருவதாக படேல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து 33 பேர் அடங்கிய குழு ஒன்று, நேபாள் நாட்டிற்கு கடந்த சனிக்கிழமை (22.08.26) சுற்றுப்பயணம் செய்தது. இதையடுத்து கடந்த புதன்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 675க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

மேலும் 3,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 13 வயது சிறுவன் உட்பட 33 பிரிட்டிஷ் நாட்டினர், என்.எச்.எஸ் பணியாளர்கள் மற்றும் ஒரு பாதிரியார் ஆகியோர் காணாமல் போயினர்.

இந்த குழுவினருடன் இணைந்து ஹேமங்கினி ஜிதேந்திர படேலின் தாயார் துளசி படேல் மற்றும் அவரின் அத்தை ஹேமா சுனில் அமீன் ஆகியோர் திபெத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, கடந்த வாரம் நேபாளத்திற்கு சென்றனர்.

இதையடுத்து நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், படேலின் தாயாரும், அத்தையும் காணாமல் போயினர். அவர்களை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், படேலால் முடியாமல் போனது.

இந்த நிகழ்வு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு படேல் அளித்த பேட்டியில், தனது தாயாரும், அத்தையும் திபெத் செல்வதற்காக ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அதற்கான முயற்சிகளை செய்து வந்ததாக கூறினார்.

மேலும் அவர்கள் காணாமல் போனதை அடுத்து, உள்ளூர் நேபாள சுற்றுலா வழிகாட்டி ஒருவர் எடுத்திருந்த ஒரு டிக்டாக் வீடியோவை தான் கண்டறிந்ததாக கூறினார்.

அந்த வீடியோவில் தனது அம்மா மற்றும் அத்தையின் புகைப்படங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து நேபாள-சீன எல்லையில் உள்ள நட்பு பாலம் என்ற இடத்தில் சுற்றுலா குழுவிடம் இருந்து கிடைத்த ஜிபிஎஸ் சிக்னல் மூலம், தனது குடும்பத்தினர் கடைசியாக இருந்த இடம் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர் அந்த சுற்றுலா வழிகாட்டியிடம் உள்ளூர் சிம்கார்டு இருக்கும் என்பதால், அவருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறினார்.

காணாமல் போன தனது தாய் மற்றும் அத்தையை தேடுவதற்காக, தனது குடும்பத்தினர் நேபாள் செல்ல இருந்ததாகவும், ஆனால் அந்த பகுதி எந்த இடத்தில் எவ்வாறு உள்ளது என்று தெரியாத காரணத்தால், அந்த முடிவை கைவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து காணாமல் போன தனது தாய் மற்றும் அத்தையை மீட்பு குழுவினரின் உதவியுடன் படேல் தொடர்ந்து தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com