

ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனான நமல் ராஜபக்சே சிறையில் அடைக்கப்பட்டார்.
இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகனும், எம்.பியுமான நமல் ராஜபக்சேவை இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று கைதுசெய்தது.
கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் (சுமார் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்) லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் எனும் குற்றச்சாட்டு அவர்மீது எழுந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலானது.
இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கவே நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரிடம் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் அசங்க போதரகம முன் ஆஜர்படுத்தப்பட்டார். நமல் ராஜபக்சேவை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.