

இந்தக் கூட்டு அலறல் நிகழ்வுக்கு முன்பாக, குரலின் அளவு, ஒலிக்கும் காலம் மற்றும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கத்துதல் போட்டியும் நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள 'ஓஷன் பீச்' கடற்கரையை ஒட்டிய 'விஸ்டா டெல் மார்' பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, ஒரே நேரத்தில் கடலை நோக்கி உரக்க கத்தித் தங்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்திய வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. "கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு" என்ற பெயரில் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டேனியல் ஈகன் என்பவரால் இந்த வித்தியாசமான கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்களே இந்த நிகழ்வுக்கான பிரதானக் காரணம். வாழ்க்கை செலவு அதிகரிப்பு, வீட்டின் வாடகை உயர்வு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் ஏற்படும் வேலைவாய்ப்பு பயம், தனிமை, குடும்பப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதாரச் சவால்கள் என பலதரப்பட்ட மன அழுத்தங்களால் அவதியுறும் மக்கள், தங்களின் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தவே இந்த மேடடைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தக் கூட்டு அலறல் நிகழ்வுக்கு முன்பாக, குரலின் அளவு, ஒலிக்கும் காலம் மற்றும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கத்துதல் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் ஒலிம்பியா குக்லியெமோட்டோ என்ற பெண்மணி 121.9 டெசிபல் ஒலியில் அலறி முதல் பரிசை தட்டினார். இது உலக சாதனையான 129 டெசிபலுக்கு மிக நெருக்கமான அளவாகும். முதல் பரிசு பெற்ற அவருக்கு வெகுமதியாக ஒரு சிறிய மெகா போன் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு வெறும் கத்துதலோடு மட்டும் முடிந்துவிடவில்லை. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு குரல் தசைப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரே அலறல் போட்டிகள் தொடங்கின. இறுதியாக மாலை வேளையில் அனைவரும் இணைந்து ஒரே நேரத்தில் மிகப்பெரிய ஒலியில் அலறித் தங்கள் மன பாரத்தை குறைத்துக் கொண்டனர். நிகழ்வின் நிறைவாக, பங்கேற்பாளர்கள் கொண்டு வந்த நறுக்கிய பழங்களை பகிர்ந்து உண்டு தங்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு ஆரோக்கியமான சமூக கூட்டமாக இதை முடித்தனர்.