

தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் தற்போதைய மேயர் கரேன் பாஸுக்கும் நித்யா ராமனுக்கும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் அரங்கேறின.
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகராட்சி மேயர் தேர்தல் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில், கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளிப் பெண்ணும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான நித்யா ராமன் (45), தற்போதைய மேயர் கரேன் பாஸைவிட (73) கருத்துக்கணிப்புகளில் வலுவான முன்னிலை பெற்றுள்ளார். வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இறுதித் தேர்தலில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற வரலாற்று சாதனையைப் படைப்பார்.
தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் தற்போதைய மேயர் கரேன் பாஸுக்கும் நித்யா ராமனுக்கும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் அரங்கேறின. குறிப்பாக, நகரத்தில் அதிகரித்து வரும் வீடற்றோர் பிரச்சனை, பொதுப் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நிர்வாகம் போன்ற முக்கியப் பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் காரசாரமாக விவாதித்தனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான தீ விபத்தின்போது மேயர் கரேன் பாஸ் களத்தில் இல்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய நித்யா ராமன், தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகள் மேலும் நான்கு ஆண்டுகளுக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது என வாக்காளர்களை வலியுறுத்தினார். இந்த அனல் பறக்கும் விவாதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் நித்யா ராமன் கணிசமான முன்னிலையைப் பெற்றுள்ளார்.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் பிறந்து, தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியவர் நித்யா ராமன். உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்ற இவர், ஒரு சிறந்த நகர்ப்புற திட்டமிடல் நிபுணருமாவார். கடந்த 6 ஆண்டுகளாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் 4-வது மாவட்ட கவுன்சிலராகச் சிறப்பாகப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.