இடது - வலது சித்தாந்தம் இந்திய அரசியலுக்கு பொருந்தாது - அமெரிக்காவில் ராகுல் பேச்சு

செல்வமும் அரசியல் அதிகாரமும் ஒரு சிலரின் கைகளில் குவிக்கப்படுகிறது.
ராகுல்
Published on: 
Summary

மேற்கத்திய இடது-வலது சித்தாந்தம் இந்திய அரசியலுக்குப் பொருந்தாது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்தியாளர் லிடியா போல்கிரனுடன் உரையாடிய ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகம், வேலையின்மை, செல்வக் குவிப்பு, சீனாவின் உற்பத்தி மாதிரி குறித்துப் பேசினார்.

ராகுல் காந்தி கூறியதாவது, "இந்தியாவில் இடது, வலது என்று எதுவும் இல்லை. இடது, வலது என்பது ஒரு மேற்கத்திய கருத்து.

இந்திய அரசியலில் இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை அளிப்பதே காங்கிரஸின் அடிப்படைக் கொள்கை.

அனைவரின் குரலுக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது. பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் கண்ணோட்டமும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கடந்த பத்தாண்டுகளாக பழங்குடியினர், தலித்துகள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். செல்வமும் அரசியல் அதிகாரமும் ஒரு சிலரின் கைகளில் குவிக்கப்படுகிறது.

வேலையின்மை

தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை. அதேநேரம் படித்த இளைஞர்களுக்கு கூட வேலை கிடைக்கவில்லை என்பதே நாட்டின் பெரும் பிரச்சினை.

ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் படித்தவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களின் எதிர்காலம் என்னவாகும்.

ஒரு பன்முக கலாச்சார சமூகத்தில், மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்போது மட்டுமே அவர்களால் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்கவும், தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் முடியும். வேலைவாய்ப்பு என்பது மிகவும் முக்கியமானது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் கோவிட் ஆகியவற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் சிறு வணிகங்களை பாதித்துள்ளன.

சீனாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

நாம் சீனாவின் உற்பத்தி மாதிரியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உற்பத்தியில் சீனா முன்னணியில் உள்ளது.

மின்சார வாகனங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களிலும் அது முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், சீனாவின் அரசியல் அமைப்பு ஜனநாயகமற்றது.

மாறாக இந்தியா, ஜனநாயகத்தைப் பேணிக்காத்துக்கொண்டே வளர்ச்சியை அடைய வேண்டும்." என்கிறார்.

X