கென்யாவை விட்டு வெளியேறுங்கள்.. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவிட்ட அதிபர் - என்ன பிரச்சனை?

கென்யா அரசு வெறுமனே இயற்கை வளங்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டும் விரும்பவில்லை.
கென்யா அதிபர்
கென்யா அதிபர்
Published on
Summary

கென்யாவில் செயல்பட்டு வரும் இந்தியாவை சேர்ந்த டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை உடனடியாக நிறுத்திவிட்டு நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு கென்யாவின் காஜியாடோ மாகாணத்தில் உள்ள மகோடி ஏரிப் பகுதியில் டாடா கெமிக்கல்ஸ் மகோடி லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சோடா ஆஷ் தயாரிப்பில் பயன்படும் Trona என்ற கனிமம் மகோடி ஏரியில் அதிகளவில் கிடைக்கிறது. கண்ணாடி தயாரிப்பு உள்ளிட்டவற்றுக்கு சோடா ஆஷ் பயன்படுகிறது.

மகோடியில் 1911 இல் பிரன்னர் மாண்ட் என்ற நிறுவனத்தால் சோடா ஆஷ் ஆலை ஒன்று தொடங்கப்பட்டது.

இந்த ஆலை 2005ஆம் ஆண்டு பிரன்னர் மாண்ட் என்ற நிறுவனத்தை கைப்பற்றியதன் மூலம் டாடா கெமிக்கல்ஸ் வசமானது.

இங்கிருந்து ஆண்டுதோறும் 3.5 லட்சம் டன்களுக்கும் அதிகமான சோடா ஆஷ் தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குற்றச்சாட்டு

கடந்த ஜூலை 28 அன்று கென்யாவின் சுரங்கத்துறை அமைச்சகம் டாடா நிறுவனத்தின் சுரங்கப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

ராயல்டி தொகையை செலுத்துவதில் உள்ள நிலுவைகள், கனிமங்களை உள்நாட்டிலேயே பயன்படும் வகையில் சுத்திகரிப்பு செய்யாதது, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி அளிக்கத் தவறியது, சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் உள்ளூர் சமூக மேம்பாட்டு ஒப்பந்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாதது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் டாடா நிறுவனம் மீது சுமத்தப்பட்டது.

அதிபர்

இந்நிலையில் டாடா கெமிக்கல் நிறுவனத்தை நாட்டில் இருந்து வெளியேறும்படி கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை காஜியாடோவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் வில்லியம் ரூட்டோ அங்கு பேசுகையில், "டாடா நிறுவனத்திடம் 100 ஆண்டுகால ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அவர்கள் காஜியாடோவில் ஒரு தொழிற்சாலையை கூடக் புதிதாக கட்டவில்லை. ஒரு கண்ணாடி தயாரிப்பு ஆலையையும் ஏற்படுத்தவில்லை.

அவர்கள் நமது இயற்கை வளங்களை இந்தியாவுக்கும் பிற இடங்களுக்கும் எடுத்துச் செல்கிறார்கள். நாம் மற்றவர்களுக்கு அடிமைகளா?" என தெரிவித்தார்.

மேலும், "கென்யா அரசு வெறுமனே இயற்கை வளங்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டும் விரும்பவில்லை. மாறாக, வளங்கள் கிடைக்கும் இடத்திலேயே தொழிற்சாலைகளைக் கட்டி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் தொழில் வளர்ச்சியையும் உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது.

டாடா நிறுவனத்திற்குப் பதிலாக புதிய இரண்டு நிறுவனங்களைக்கொண்டு வந்து இங்கு மிகப்பெரிய தொழிற்சாலைகளை அமைக்கப்படும்" என அதிபர் தெரிவித்துள்ளார்.

டாடா நிறுவனம் விளக்கம்

கென்ய அரசின் அதிகாரத்தை மதிப்பதாகவும், சட்டப்பூர்வ முறையில் இந்தப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகோடி பகுதியில் சுமார் 500 நேரடி ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் டாடா நிறுவனத்தைச் சார்ந்துள்ளனர் என்றும், சுமார் 30,000 உள்ளூர் மக்கள் நிறுவனத்தின் குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளால் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கென்ய அதிபரின் உத்தரவை இறுதி முடிவாக கருதவில்லை எனவும் இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் எனவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com