

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'சீக்கியர்கள் நீதிக்குப் போராட்டம்' அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னு, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சிவில் வழக்கைத் தொடர்ந்தார்.
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னு, இந்திய அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் வழக்கு ஆவணங்கள் மற்றும் சம்மனை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ராஜதந்திர குறிப்பு மூலம் அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் அமெரிக்கச் சட்டக் குறியீட்டின் பிரிவு 1608(a)(4)-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியிட்ட ராஜதந்திர குறிப்பின்படி, கடந்த அக்டோபர் 9-ஆம் தேதியே இந்த ஆவணங்கள் இந்திய தூதரகத்திற்கு வழங்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட ஆலோசகர் அலுவலகத்தை சேர்ந்த ஜாரெட் என்.ஹெஸ், அக்டோபர் 20-ஆம் தேதியிட்ட கடிதத்தில் நீதிமன்றக் கிளார்க்கிற்குத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'சீக்கியர்கள் நீதிக்குப் போராட்டம்' அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னு, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சிவில் வழக்கைத் தொடர்ந்தார். அமெரிக்காவில் தன்னை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டதாகக் கூறி அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முன்னாள் 'ரா' சமந்த் கோயல், மூத்த அதிகாரி விக்ரம் யாதவ் மற்றும் இந்தியக் குடிமகனான நிகில் குப்தா உள்ளிட்ட பலரை இந்த வழக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் மற்றும் மன உளைச்சலுக்காக நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த விவகாரத்தோடு தொடர்புடைய இந்தியா தொடர்பான வழக்கு ஆவணங்கள் தற்போது ராஜதந்திர வழிகள் மூலம் முறையாக இந்திய அரசை சேர்ந்துள்ளன. இருப்பினும், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் மனுதாரரின் தரப்பு வாதங்களே தவிர, நீதிமன்றத்தால் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.