

காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தின் உயரமான குரேஸ் பள்ளத்தாக்கில் இந்த பருவத்திற்கான முதல் பனிப்பொழிவானது தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள உயரமான மலைப்பகுதிகள் வெண்போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கின்றன.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் என்ற புகழ்பெற்ற பனிச்சறுக்கு மையத்தின் மேல் பகுதிகளில் அதாவது கோண்டோலா மற்றும் அபரவத் பகுதி உள்ளிட்ட இடங்களில் இரவில் பனிப்பொழிவு ஏற்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பனிப்பொழிவானது புகழ்பெற்ற சுற்றுலாதலத்தின் அழகை மேலும் கூட்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வடக்கு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தின் குரேஸ் பகுதியில் உள்ள துலைல் பள்ளத்தாக்கு மற்றும் காபூலி கலியிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உயரமான பகுதிகளில் உள்ள வேறு சில இடங்களிலும் லேசான பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே ஜம்மு காஷ்மீர் பகுதியில் மிதமானது முதல் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.