

இஸ்ரேல் ராணுவம் காசாவுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தை சேர்ந்த 35 லட்சம் மக்களின் புகைப்படங்களை அமேசான் கிளவுட் தளத்தில் இஸ்ரேல் பதிவேற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து, பாலஸ்தீனம் மற்றும் காசா பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு காசா நகரில் பணயக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய மக்களை அடையாளம் காண, ‘அமேசான் ரெகாக்னிஷன்’ (Amazon Rekognition) என்ற தொழில்நுட்பத்தை இஸ்ரேல் 2023 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறது.
மேலும் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கும் நபர்களையும் அடையாளம் காண்பதற்காக, இந்த தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் அமேசான் நிறுவனத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ‘புராஜக்ட் நிம்பஸ்’ என்ற ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டது.
இதன்மூலம் அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் கூகுள் ஆகியவை இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் அதன் ராணுவத்திற்கும் கிளவுட் சேவைகளை வழங்கி வருகின்றன.
மேலும் இந்த நிம்பஸ் சேவையில், இஸ்ரேல் அரசாங்கம் குறிப்பிட்ட விதிமுறைகளை மீறினாலும், அதன் சேவைகளை இடைநிறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமேசானுக்கு அதிகாரம் கிடையாது.
இந்த சூழலில், மேற்கு கரை மற்றும் காசாவில் வசிக்கும் 35 லட்சம் பாலஸ்தீனியர்களின் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்வதற்காக அமேசானின் கிளவுட் தளத்தில் இஸ்ரேல் பதிவேற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புகைப்பட பகுப்பாய்வு தளமான ரெகாக்னிஷனில், பயங்கரவாதிகளின் முகத்தை அடையாளம் காணும் திட்டத்தில் இஸ்ரேல் ஈடுபட உள்ளது.