

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் ராணுவ தலைவர் சமீர் அபு யூனிஸ் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு ராணுவ தலைவர் சமீர் அபு யூனிஸ் மூளையாக செயல்பட்டார்.
இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 1200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 251 பேர் பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
இதையடுத்து ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, பாலஸ்தீன நாட்டின்மீது கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்து வருகிறது.
இதுவரையில் பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், சுமார் 74,200 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் ராணுவ பிரிவை சேர்ந்த ஒரு மூத்த பயங்கரவாதியை இஸ்ரேலிய பாதுகாப்பு படையும் (IDF), இஸ்ரேலிய ராணுவமும் (ISA) இணைந்து தாக்குதல் நடத்தி கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஹமாஸ் ராணுவ தலைவர் சமீர் அபு யூனிஸ் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக இஸ்லாமிய இயக்கத்தின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இது ஒரு கோழைத்தனமான நடவடிக்கை என்றும் அக்டோபர் 7 அன்று நடைபெற்ற தாக்குதல்களை, தளபதி யூனிஸ் மேற்பார்வையிட்டதாகவும் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ராணுவ தலைவர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து காசா குடிமை பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் கூறுகையில், 53 வயதான யூனிஸின் உடல் தங்கள் அமைப்புக்கு கிடைத்துள்ளதாகவும், காசாவின் தெற்கில் நடந்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இஸ்ரேல் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் தற்போது ஒரு ஆளும் கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் சூழலில், தற்காலிக பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகித்து வருகிறார்.