

துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கி 180 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம், பயங்கவரவாதிகளால் கடத்தப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, அவசர அவசரமாக சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது.
அப்போது விமானம் கிளம்பி சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த அறையில் விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவசரகால சமிஞ்சைகள் இஸ்ரேல் நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்குவாக் 7700 (பொது அவசரநிலை) என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் விமானம் வழக்கத்திற்கு மாறாக சுமார் 15,000 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தபோது, ஸ்குவாக் 7500 (விமான கடத்தல்) என்ற எச்சரிக்கை விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமானத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து பாதுகாப்பு அமைச்சருடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இஸ்ரேலிய வான்வெளியும் சிறிது நேரத்தில் மூடப்பட்டது.
இதன் காரணமாக பயனிகள் விமானம், ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் யு டர்ன் செய்து சவுதி அரேபியா நோக்கி திரும்பியது.
பின்னர் இந்த விமானம், சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த நிகழ்வு குறித்து விமானத்தில் பயணம் செய்த மிரியம் என்ற பயணி கூறுகையில், விமானியின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.
இதையடுத்து விமானத்தின் கதவை ஊழியர்கள் திறந்த போது, விமானிகளில் ஒருவர் ரத்த காயங்களுடன் தரையில் கிடந்ததை தான் பார்த்ததாக கூறினார்.
இந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்த முழுமையான விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. விமானிகளில் ஒருவர் வேண்டுமென்றே சமிக்ஞையை அனுப்பினார்களா அல்லது அது சண்டையின் போது நிகழ்ந்ததா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படாமல் உள்ளது.
இதையடுத்து பயணிகள் விமானத்தில் நடந்த குழப்பம், ஒரு விமான கடத்தல் சம்பவம் அல்ல என்று இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.