

போதிய நிதி இல்லாத காரணத்தால் காசா மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மாதாந்திர உணவு உதவியை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்ட்டுள்ளதாக ஐ.நா. உலக உணவுத் திட்ட மையம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் காசா மக்கள் சுமார் 23 லட்சம் பேரில் 14 லட்சம் பேர் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சம் பேரின் நிலை மிக மோசமானதாக உள்ளது.
காசாவில் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் உணவளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மாதாந்திர உணவு உதவி பெறும் மக்களின் எண்ணிக்கையை 16 லட்சத்தில் இருந்து 11 லட்சமாக குறைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழங்கப்படும் உணவின் அளவும் பாதியாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய நிதி இல்லாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போர் அதிகம் பாதித்த இடங்களில் சென்றடைய முடியாத பகுதிகளில் வசிப்போருக்கு இரு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மேற்கு கரை பகுதியில் அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கு சுமார் 450 மில்லியன் டாலர் தேவைப்படுவதாகவும் ஐநாவின் உலக உணவுத் திட்ட மையம் தெரிவித்துள்ளது.
மேலும் காசாவிற்குள் இனி மளிகை பொருட்கள் நுழையாது என இஸ்ரேல் கடந்த புதன்கிழமை அறிவித்ததிலிருந்து மாவு, முட்டை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன
மளிகை பொருட்களின் இறக்குமதிக்கு இஸ்ரேல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், காசாவில் உணவு நெருக்கடி தீவிரமடையும் என அச்சம் நிலவுகிறது.
எல்லைகள் மூடப்பட்ட கடந்த இரண்டு மூன்று நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், ஏற்கனவே வறுமையால் அவதிப்படும் குடும்பங்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடி வருகின்றன என்று அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
விலைகள் மேலும் உயரக்கூடும் என்ற அச்சத்தில், மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்களை வாங்கிச் சேமித்து வருகின்றனர்.
இருப்பினும், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட வாங்க முடியாத பல குடும்பங்களுக்கு, கூடுதலாக உணவுப் பொருட்களை வாங்குவது சாத்தியமற்றதாக உள்ளது.
எல்லைக் கடக்கும் இடங்கள் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டிருந்தால், நிலைமை மேலும் மோசமடையும் என்ற அச்சம் நிலவுகிறது.