ஈரான் ‘Pickaxe Mountain' விவகாரம்: அமெரிக்கா அணுஆயுதத் தாக்குதல் நடத்தினால் இந்தியாவுக்குப் பாதிப்பு?

ஈரான் ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் பிக்அக்ஸ் மலையை ஒரு மணி நேரத்தில் தகர்ப்போம் - அதிபர் டிரம்ப்
Pickaxe Mountain
Published on: 
Summary

ஈரானின் அதிரடி அணு ஆயுத உற்பத்தி மையமாகக் கருதப்படும் ‘பிக்அக்ஸ்’ மலையைக் குறிவைத்து அமெரிக்கா அணுஆயுதத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள தகவல், உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல் ஒருவேளை நடத்தப்பட்டால், அதன் கதிரியக்கப் பாதிப்புகள் இந்திய எல்லை வரை பரவக்கூடும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

என்ன இந்த ‘பிக்அக்ஸ்’ மலை? ஏன் அணுஆயுத தாக்குதல்?

ஈரானின் மத்திய இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள பிக்அக்ஸ் மலைக்கு அடியில், சுமார் 328 அடி ஆழத்தில் ஈரானின் அதிநவீன நிலத்தடி அணுஆயுத உள்கட்டமைப்பு மையம் அமைந்துள்ளதாகப் புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.

கடந்த ஆண்டு ஈரானின் ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தனது ‘பங்கர்-பஸ்டர்’ குண்டுகளை வீசி அழித்தது. ஆனால், அவை 60 அடி ஆழம் வரை மட்டுமே ஊடுருவக்கூடியவை.

பிக்அக்ஸ் மலை மையம் 300 அடிக்கும் அதிகமான தடிமனுள்ள கடினமான கிரானைட் பாறைகளுக்குக் கீழ் உள்ளதால், சாதாரண ஏவுகணைகளால் இதை அழிக்க முடியாது.

எனவே, இதைத் தகர்க்க அணுஆயுதத் தாக்குதல் மட்டுமே ஒரே வழி என்று அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் முன்னாள் செய்தித் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சன் உள்ளிட்டோர் விவாதித்து வருகின்றனர்.

கதிரியக்கப் பாதிப்பு இந்தியாவுக்கு வருமா? நிபுணர்கள் விளக்கம்

ஈரானின் பிக்அக்ஸ் மலை இந்தியாவிலிருந்து சுமார் 2,500 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கதிரியக்கக் மேகங்கள் இந்தியாவுக்குப் பரவுமா என்பது குறித்து பாதுகாப்புத் துறை நிபுணர் சந்தீப் உன்னிதன் மற்றும் புவிசார் அரசியல் நிபுணர் மரியோ நவ்ஃபல் ஆகியோர் சில முக்கியக் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அணுஆயுத வெடிப்பின் போது எழும் கதிரியக்கத் துகள்கள், காற்றின் வேகம் மற்றும் திசை காரணமாகக் கிழக்கு நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது.

இந்த கதிரியக்க மேகங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் மேற்குப் பகுதிகளை முதலில் மிகக் கடுமையாகப் பாதிக்கும்.

காற்றின் திசை தீவிரமாக இருந்தால், வடமேற்கு இந்தியப் பகுதிகளான பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளில் இந்த கதிரியக்கத் துகள்கள் நுழைய வாய்ப்புள்ளது.

எனினும், 2,500 கி.மீ தூரத்தைக் கடந்து வரும்போது இதன் வீரியம் குறைந்து, மிகக் குறைந்த அளவிலான நுண்ணிய அளவிலான துகள்கள் மட்டுமே பதிவாக வாய்ப்புள்ளது.

கதிரியக்கக் மேகங்கள் நகரும் போது குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்தால், அந்தப் பகுதிகளில் கதிரியக்கத் துகள்கள் மண்ணில் அதிகளவில் படியக்கூடும்.

உலகப் போர் மூளும் அபாயம்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் பிக்அக்ஸ் மலையை ஒரு மணி நேரத்தில் தகர்ப்போம் என்று எச்சரித்துள்ளார். எனினும், மற்றொரு பேட்டியில் தான் அணுஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.பி. அஸ்தானா உள்ளிட்ட ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கையின்படி, அமெரிக்கா இந்த அணுஆயுதப் பொத்தானை அழுத்தினால் அது ஈரானோடு முடியாது, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளையும் போரில் இழுத்து விட்டு, 3-ஆம் உலகப் போருக்கே வழிவகுத்துவிடும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் இதில் எச்சரிக்கையாகவே முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X