

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்த நிலையில் அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது.
தற்போது இரு நாடுகள் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே ஈரான் மீது இதுவரை இல்லாத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்காவுக்கு உதவக் கூடாது என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதுகுறித்து ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி கூறியதாவது:-
அமெரிக்காவின் பொருளாதார அழுத்த தந்திரங்களுக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளிக்க வேண்டாம். ஈரானுக்கு எதிராக டிரம்ப் அறிவித்துள்ள பொருளாதாரப் போர் நடவடிக்கையில் அண்டை நாடுகள் இணைந்தால், ஹோர்முஸ் ஜலசந்திக்கு வெளியே உள்ள எண்ணை கப்பல் வழித்தடங்களை ஈரான் குறிவைக்கக்கூடும்.
டிரம்ப் ஏதாவது செய்ய விரும்பினால், நாங்கள் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுப்போம்.
டிரம்ப்பின் பொறுப்பற்ற செயல்பாடுகளும் ஈரான் மீதான தாக்குதல்களும் பல நாடுகளிடையே அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான விருப்பத்தை அதிகரித்துள்ளன.
டிரம்ப் அணுசக்தி பாதுகாப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அணு சக்தி பாதுகாப்பின்மையையே உருவாக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஹோர் முஸ் ஜலசந்தி, அமெரிக்கா வின் ஒரு பிராந்தியம் என்று கூறி மீண்டும் அந்த புகைப்படத்தை டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த ஜலசந்தியில் 1,000-க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.