டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம் - ஈரான் தடாலடி

அமெரிக்க ராணுவம் நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.
டிரம்ப் - மொஜ்தபா காமேனி
டிரம்ப் - மொஜ்தபா காமேனி
Published on

வரும் 2029 உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிகிறது. அதுவரை அமெரிக்காவுடனான போரை நீட்டிக்க உள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகரான முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார்.

பேட்டி

பிபிஎஸ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் "எதிரி மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அஞ்சும் நிலையை உருவாக்குவதே எங்களின் முதன்மை இலக்கு

இதற்கான ஒரு வழி, இந்தப் போரை டிரம்ப்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை நீட்டித்து, அவர்களுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதாகும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்த நினைக்கும் எவரும் அதற்குப் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஏவுகணைகள் இருப்பு

அமெரிக்க ராணுவம் தாங்கள் முன்பு நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் ஈரான் அறிந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

ஈரான் அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருவதாகவும் "ஒருவேளை ஈரானிடம் ஏவுகணைகள் தீர்ந்துபோகும் நிலை வந்தாலும், அன்றைய தினம் அமெரிக்காவுக்கு நாங்கள் இன்னும் ஆபத்தானவர்களாக மாறுவோம்.

ஏனெனில், உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு ஆயிரக்கணக்கில் பொருளாதார நலன்கள் உள்ளன. அவை அனைத்தையும் எளிதில் அழிக்க முடியும்" என எச்சரித்தார்.

புதிய புயல்

அமெரிக்க படைகள் சந்தித்து வரும் இழப்புகளாலும், உள்நாட்டில் குறைந்து வரும் செல்வாக்காலும் போரை விரைந்து முடிக்க டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

அணுசக்தி ஒப்பந்தம் கூட வேண்டாம், ஹார்முஸ் பிரச்சனையில் உடன்பாடு ஏற்பட்டால் போதும் என அவர் இறங்கி வந்ததாக அண்மையில் ரிப்போர்ட் ஒன்று வெளியானது.

ஆனால் டிரம்ப் பதவிக்காலம் முடியும்வரை போரை தொடர உள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது புதிய புயலை உருவாகியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com