

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது.
அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஒரு முக்கிய ராஜதந்திர நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதில் அப்போதைய உச்சந்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிட செய்ய இந்த தாக்குதலை அமெரிக்கா தொடுத்தது.
இதற்கு பதிலடியாக, ஈரான், இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது.
இந்த மோதல் லெபனானுக்கும் பரவியது. அங்கு, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
மறுபுறம் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சமீப காலமாக பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க இடைக்கால தேர்தல்களுக்கு பிறகு போர் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த மத்தியஸ்தர்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரான், கத்தார் நாட்டின் தூதரக மத்தியஸ்தம் மூலமாக அமெரிக்காவிற்கு புதிய அணுசக்தித் திட்டம் தொடர்பான முன்மொழிவு ஒன்றை அனுப்பியுள்ளது.
ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்கா தனது ஏழு நிபந்தனைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
'ராய்ட்டர்ஸ்' செய்தி அறிக்கையின்படி, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த ஈரானிய அதிகாரி இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் அனுப்பிய திட்டத்தை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது என்று கூறிய அவர் அந்த திட்டத்தின் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.
முன்னதாக, ஈரானிய பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாய், "நாங்கள் அமெரிக்காவிற்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளோம். அவை நிறைவேற்றப்படும் வரை நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம், பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம்" என்று கூறியிருந்தார்.
ஈரான் தனது நிபந்தனைகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இது குறித்த சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன் படி இந்த நிபந்தனைகளில், ஈரான் விதித்த நிபந்தனைகளில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உட்பட போர் நடவடிக்கைகளையும் நிறுத்துவது, ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவது, ஈரானியத் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்ட கடற்படை முற்றுகையை நீக்குவது, அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்குவது, முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பைக் குறைப்பது, போர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், எந்தவொரு பேச்சுவார்த்தையும் அணுசக்தி விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.